ஞானசார தேரரின் காவி உடை நீக்கப்பட்டமைக்கு மகாநாயக்க தேரர்கள் கவலை

நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமையச் சிறையிலடைக்கப்பட்ட பூஜ்ய கலகொடஅத்தே ஞானசார தேரருக்குக் வேறு ஆடை அணிவித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தச் சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்தமைக்குத் தமது பலத்த கவலையையும் அதிர்ச்சியையும் தெரிவித்து முப்பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அரசியலமைப்புக்கும் நீதித்துறைச் செயற்பாடுகளுக்கும் தடங்கல் ஏற்படக் கூடாது என்பதே தமது நிலையான நிலைப்பாடு என அக்கடிதத்தின் மூலம் மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், ஒரு பௌத்த துறவியின் காவி உடையை அகற்றுவதோ அல்லது அவரது பிக்குத் தன்மையை இரத்து செய்வதோ வெறும் அரசாங்க நிர்வாக அல்லது சிறைச்சாலை விதிமுறைகளுக்கு மட்டும் உட்பட்ட ஒரு விடயம் அல்ல என்றும், அது கௌரவத்திற்குரிய மகா சங்கத்தினருக்கு உரிய சாசன ரீதியான கடமை என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.



