வீடொன்றில் வசித்து வந்த திருமணமாகாத இரு ஓய்வுபெற்ற ஆசிரியைகள் சடலமாக மீட்பு – கொலையாளிக்கு பொலிஸார் வலை

ஹபாரதுவ, பிட்டிடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் 86 மற்றும் 81 வயதுடைய இரு வயோதிப சகோதரிகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்கள் ஓய்வுபெற்ற ஆசிரியர்களான திருமணமாகாத இரு சகோதரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பிட்டிடுவ பகுதியில் உள்ள பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ள வீடொன்றில் இவ்விரு பெண்களும் தனியாக வசித்து வந்துள்ளதாக ஹபாரதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களின் சடலங்கள் வீட்டின் பின்புறத்தில் இரு வேறு இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த இரட்டைக்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதோடு, கொலைக்கு காரணமானவர்கள் யாரென்றும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக ஹபாரதுவ பொலிஸாரும் காலி பிரிவுக்கு பொறுப்பான குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



