கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்படும் பௌத்த பிக்குகள் தொடர்பில் தற்போதைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை திருத்துவதற்கு ஏற்பாடு செய்வதாக ஜனாதிபதி உறுதியளிப்பு

சிறையில் பௌத்த பிக்குகளை வைத்திருப்பது மற்றும் அவர்களை நீதிமன்றம் உள்ளிட்ட வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்வது தொடர்பான தற்போதைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை திருத்துவதற்கு குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று பௌத்த பிக்குகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக்குகளை சிறையில் வைத்திருக்கும் முறை மற்றும் அவர்களை சிறைச்சாலையிலிருந்து வெளியில் அழைத்துச் செல்லும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் புதிய உத்தரவுகள் மற்றும் விதிமுறைகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் குறித்த குழு ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சட்ட ஏற்பாடுகளை ஆராய்ந்து, தேவையான திருத்தங்கள் மற்றும் புதிய நடைமுறைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைக்கும் வகையில் இந்தக் குழு செயற்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



