மெட்ரோ பேருந்துகளை இலக்கு வைத்து, தனியார் பேருந்து சாரதிகள் திட்டமிட்டு விபத்துகளை ஏற்படுத்துகிறார்களா…? விசாரணைகளில் அம்பலமாகும் விடயங்கள்

கொழும்பு நகரில் ஏழு பாதைகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ பேருந்துகளை இலக்கு வைத்து, தனியார் பேருந்து சாரதிகள் திட்டமிட்டு விபத்துகளை ஏற்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை பொலிஸார் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தனியார் பேருந்துகள் மெட்ரோ பேருந்துகளுடன் மோதிய பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இது இந்தச் சேவையை சீர்குலைப்பதற்காக முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட முயற்சியோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.
மஹரகம பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பிரதி பொலிஸ் மா அதிபர், அதுருகிரியவின் மில்லேனியம் சிட்டிக்கு அருகில், இராஜகிரிய, மாகும்புர, கெஸ்பேவ, பொரளை மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய இடங்களில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் கூறினார்.
மில்லேனியம் சிட்டி மற்றும் இராஜகிரிய ஆகிய இடங்களுக்கு அருகில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய தனியார் பேருந்தின் சாரதியிடம் பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
மாகும்பர பகுதியில் இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில், தனியார் பேருந்து சாரதி மதுபோதையில் இருந்ததாகவும், செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், சில தனியார் பேருந்து உரிமையாளர்கள் மெட்ரோ பேருந்துகள் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்துவதைத் தடுத்து வருவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் குற்றம் சாட்டினார்.
இந்தச் சம்பவங்கள் பல தனிநபர்கள் அடங்கிய திட்டமிட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியா என்பதைத் தீர்மானிக்க பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மெட்ரோ பேருந்துகளுக்கு திட்டமிட்டு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என எச்சரித்த பொலிஸார், செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கும் சாரதிகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
கொழும்பு நகரில் பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மெட்ரோ பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.



