News

14 வயது சிறுவனை பா*லியல் து*ஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆசிரியைக்கு 24 வருடங்கள் சிறைத்தண்டனை #இலங்கை

14 வயது சிறுவன் ஒருவரை (பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆசிரியை ஒருவருக்கு 24 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சினிக் விஜேசேகர தீர்ப்பளித்துள்ளார்.

குறித்த குற்றச்சாட்டுக்கள் மூன்றுக்கு தலா 8 ஆண்டுகள் வீதம் மொத்தம் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், அந்தத் தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்கும் வகையில் (ஒரே காலத்தில்) 8 ஆண்டுகளுக்கு மாத்திரம் சிறைத்தண்டனையை அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குற்றவாளிக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மூன்று குற்றச்சாடுகளுக்கும் தலா 250,000 ரூபாய் வீதம் மொத்தம் 750,000 ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நஷ்டஈட்டுத் தொகையை செலுத்தத் தவறின் மேலதிகமாக ஒரு வருட சிறைத்தண்டனையும், அபராதத் தொகையை செலுத்தத் தவறின் மேலும் ஒரு வருட இலகு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர், ஹிதிகிபுல பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியையாகப் பணியாற்றிய, இரண்டு பிள்ளைகளின் தாயான (வயது 49) ஆவார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதியன்று, 14 வயது பாடசாலை மாணவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பலாத்காரமாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில், சட்டமா அதிபரால் 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்கம், 1998 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்கம் மற்றும் 2006 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க திருத்தச் சட்டங்களின் பிரகாரம் தண்டனைச் சட்டக்கோவையின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

38 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை கடந்த 6 ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டபோது, விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த ஆசிரியை மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் நலம் பெற்று, கடந்த 8 ஆம் திகதி வழக்கு மீண்டும் அழைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கில் அரச சட்டவாதி மெனுர பெரேரா அரசாங்க தரப்பு சார்பில் வாதாடங்களை முன்வைத்ததுடன், பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி சுசந்த ரத்நாயக்க ஆஜராகினார். மொனராகலை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் பிரியதர்சன அரச சட்டவாதிக்கு உதவிகளை வழங்கியிருந்தார்.

சுமணசிறி குணத்திலக்க

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button