ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தமாகிறது…
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தயாரித்திருந்த திட்டத்திற்கு, வரவிருக்கும் ஐக்கிய அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்பு மீண்டும் பிராந்தியப் போர் ஒன்றை மூட்டுவதற்குள்ள விருப்பமின்மை காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக பிரிட்டனின் முன்னணி ‘பைனான்சியல் டைம்ஸ்’ (Financial Times) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த போர்த் திட்டங்கள் குறித்த இரகசியத் தகவல்களை அறிந்த மூன்று வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்த நாளிதழ் சுட்டிக்காட்டுவதாவது, கடந்த அக்டோபர் 10 ஆம் திகதிய வார இறுதியில் ஈரானிய ஆட்சிபீடத்தின் பிரதான மையங்கள், அணுமின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி அமைப்புகள் உள்ளிட்ட பிரதான குடிமக்கள் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் முழுமையான ஆயத்த நிலையில் இருந்தன.
கடந்த பெப்ரவரி மாதத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது நடத்திய கூட்டுத் தாக்குதல்களை விடவும் மிகமிகப் பலமான மற்றும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல் தொடரொன்று இம்முறை திட்டமிடப்பட்டிருந்ததுடன், இதற்கு முன்னர் இலக்கு வைக்கப்பட்டிராத பல குடிமக்கள் உள்கட்டமைப்புகளும் இஸ்ரேலின் புதிய இலக்குப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது.
எவ்வாறாயினும், வரவிருக்கும் நவம்பர் 03 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள ஐக்கிய அமெரிக்கக் காங்கிரஸ் இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு மத்திய கிழக்கில் புதிய போர் முனையொன்றைத் திறப்பது தனது அரசியல் ஸ்திரத்தன்மைக்குப் பாதகமாக அமையும் எனக் கருதி அதிபர் டொனால்ட் டிரம்ப் அத்திட்டத்திற்குத் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இதனால் நெதன்யாகுவின் இராணுவ நடவடிக்கையைக் பாதியிலேயே கைவிட நேர்ந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலுக்காக அமெரிக்கா நேரடியாகப் பங்களிக்கத் திட்டமிடப்பட்டிருந்ததா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனினும், எதிர்வரும் வாரங்களில் மீண்டும் இதுபோன்ற தாக்குதல் தொடுக்கப்படும் ஆபத்தை நிராகரிக்க முடியாது எனவும், மோதல்களை மீண்டும் தொடங்குவதற்கான இறுதி முடிவு முழுமையாக அதிபர் டிரப்பிடமே உள்ளதாகவும் அந்தச் செய்தித்தாள் மேலும் கூறுகிறது. இந்த வெளிப்படுத்தல் தொடர்பாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது.
அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் அவசரமாக இஸ்ரேலுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் நெதன்யாகுவைச் சந்தித்து பிராந்திய அச்சுறுத்தல்கள் குறித்து விவாதித்து இரண்டு நாள்கள் கடப்பதற்குள்ளேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் ‘சேனல் 12’ தொலைக்காட்சி நிலையமும் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது; அதாவது அக்டோபர் 27 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள இஸ்ரேல் பொதுத் தேர்தலுக்கும் நவம்பர் 03 அமெரிக்கத் தேர்தலுக்கும் முன்பு ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை மீண்டும் முன்னெடுக்குமாறு நெதன்யாகு அதிபர் டிரம்பிற்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்ததாக அதில் கூறப்பட்டிருந்தது.
எனினும், அக்டோபர் 09 ஆம் திகதியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட டொனால்ட் டிரம்ப், இடைக்காலத் தேர்தலுக்கு முன்பு ஈரானைத் தாக்கப் போவதில்லை என வெளிப்படையாகக் கூறினார். ஈரானின் மீது அத்தகைய தாக்குதல் தொடுக்கப்பட்டால், அதற்குப் பதிலடியாக தெஹ்ரானில் இருந்து ஏவப்படக்கூடிய பெருமளவிலான பாலிஸ்டிக் ஏவுகணை மழையின் காரணமாக இஸ்ரேலின் பொதுத் தேர்தலையே இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என இஸ்ரேலிய இராணுவத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயால் சமீர் அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டியிருந்தார்.



