சவூதியின் அராம்கோ எண்ணெய் விநியோகத் தளத்தின் மீது தொடுக்கப்பட்ட துரோண் (Drone) தாக்குதலில் இருவர் பலி: இருவர் காயம்
சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான ஷாய்பா (Shaybah) எண்ணெய் விநியோகத் தளத்தை இலக்கு வைத்துத் தொடுக்கப்பட்ட துரோண் (Drone) தாக்குதல் முயற்சி காரணமாக வெளிநாட்டவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த இருவரும் உயிரிழந்ததுடன், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இருவரும் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவூதி வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் குறித்த துரோண் விமானம் வான்வெளியிலேயே அழிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊடகச் செய்திகளின்படி, அங்கு விழுந்த சிதறல்கள் காரணமாக எண்ணெய் தளத்திற்குச் சேவை வழங்கும் ஒப்பந்த நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனம் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தச் சம்பவத்தினால் எண்ணெய் தளத்தின் செயற்பாடுகளுக்கு எத்தகைய தாக்கமும் ஏற்படவில்லை என சவூதி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



