‘அர்னாப்’ புயல் அப்டேட்

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ‘அர்னாப்’ புயலாக வலுப்பெறும் எனவும் ஆந்திராவில் 28 ஆம் திகதி கரையைக் கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், மத்திய கிழக்கு, அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகக் கடந்த 24 ஆம் திகதி வலுப்பெற்றது.
இது தெற்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று காலை மேலும் வலுப்பெற்று மத்திய கிழக்கு, அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ‘அர்னாப்’ புயலாகவும், நாளை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாகவும் வலுப்பெறக் கூடும்.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று மிக தீவிர புயலாக ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளை அடையக் கூடும். ஆந்திரா, ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே மிக தீவிர புயலாக 28 ஆம் திகதி முற்பகல் கரை கடக்கக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



