பொருட்களின் விலை ஏற்ற இறக்கம் இலங்கைக்கு மட்டும் உரித்தானதல்ல – அமைச்சர் வசந்த சமரசிங்க

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் நாட்டின் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கவும், தடையில்லாப் பொருள் விநியோகத்தைப் பேணவும் அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சந்தையில் பொருள் விநியோகத்தை ஸ்திரமாகப் பேணுவதற்காக பொது மற்றும் தனியார் துறைகளின் பல முக்கிய பங்குதாரர்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனம், லங்கா சதொச, நாடளாவிய ரீதியில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் வலையமைப்பு, புறக்கோட்டை மொத்த இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் முன்னணி உள்நாட்டு உற்பத்தியாளர்களுடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டு நடவடிக்கைகள் ஊடாக பண்டிகைக் காலம் முழுவதும் திறந்த சந்தையில் அத்தியாவசிய நுகர்வோர் பொருட்கள் எந்தவொரு தடையுமின்றி பொதுமக்கள் எளிதில் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாட்சியின் பிரதான நோக்கமாகும்.
பண்டிகைக் காலங்களில் நிலவும் அதிக கேள்வி காரணமாக சந்தையில் பொருட்களின் விலைகளில் சிறிய மாற்றங்கள் அல்லது ஏற்ற இறக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், இது இலங்கைக்கு மட்டுமே உரிய நிலை அல்ல என்பதையும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், நுகர்வோர் மீது சுமத்தப்படும் நிதிச் சுமையை முடிந்தவரை குறைத்து, சந்தை விலை மட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் அரசாங்கம் மிக நெருக்கமாகவும் தொடர்ச்சியான தலையீட்டுடனும் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.



