News

இலங்கையின் நடப்புக் கணக்கில் 420 மில்லியன் அமெரிக்க டொலர் பற்றாக்குறை – இலங்கை மத்திய வங்கி தகவல்

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஜனவரி முதல் செப்டம்பர் வரை) நாட்டின் வெளிநாட்டு நடப்புக் கணக்குச் சமநிலையில் 420 மில்லியன் அமெரிக்க டொலர்களின் குறிப்பிடத்தக்க பற்றாக்குறை பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் நாட்டின் நடப்புக் கணக்கில் 1,853 மில்லியன் டொலர் என்ற குறிப்பிடத்தக்க உபரி காணப்பட்ட பின்னணியில், இந்த முறை அது பற்றாக்குறையாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதி வருமானத்தின் வளர்ச்சியை விட இறக்குமதிச் செலவுகள் பெருமளவில் அதிகரித்ததே இந்த நிலைமைக்கு முக்கியக் காரணமாகும். கூடுதலாக, வெளிநாட்டுப் பணப்பரிமாற்ற வரவுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்ட போதிலும், சுற்றுலாத் துறை வருமானம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை வருமானம் வீழ்ச்சியடைந்தமையும் நடப்புக் கணக்கு எதிர்மறையான மதிப்பைப் பெற நேரடியாகப் பங்களித்துள்ளன.

மத்திய வங்கித் தரவுகளின்படி, ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டின் மொத்த இறக்குமதிச் செலவு 18,666 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இது 2025ஆம் ஆண்டில் பதிவான 15,390 மில்லியன் டொலருடன் ஒப்பிடும்போது 21.3 சதவீதமாகும்.

இருப்பினும், இக்காலப்பகுதியில் மொத்த ஏற்றுமதி வருமானம் 10,754 மில்லியன் டொலர்களாகவே பதிவானது. இது 2025ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 10,215 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 5.3 சதவீதம் என்ற மந்தமான விகிதத்திலேயெ வளர்ச்சியடைந்துள்ளது. இதனால், 2025ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 5,174 மில்லியன் டொலராக இருந்த மொத்த வர்த்தகப் பற்றாக்குறை, இம்முறை 7,912 மில்லியன் டொலர்களாக வேகமாக விரிவடைந்துள்ளது.

ஆண்டின் கடந்த ஒன்பது மாதங்களில் சுற்றுலாத் துறையின் மூலம் பெறப்பட்ட வருமானம் 2,245 மில்லியன் டொலராகும். இது 2025ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட 2,473 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடும்போது 9.2 சதவீதப் பின்டைவாகும்.

அதேபோல், கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் / வணிகச் செயல்முறை (IT/BPO) வெளி சேவைகளை வழங்குவதன் மூலம் பெறப்பட்ட வருமானமும் 621 மில்லியன் டொலரிலிருந்து 525 மில்லியன் டொலராக 15.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக சேவைக்கணக்கின் மொத்த வரவுக் கூட்டுத் தொகை 5,257 மில்லியன் டொலராக 0.6 சதவீத சிறிய வீழ்ச்சியைக் காட்டியுள்ளது.

இருப்பினும், வெளிநாட்டு வேலைவாய்ப்பில் உள்ளவர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணப்பரிமாற்றத் தொகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டது. ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்ற வரவுகள் 6,865 மில்லியன் டொலர்களாகப் பதிவாகின. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 5,812 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 18.1 சதவீத அதிகரிப்பாகும்.

2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு நடப்புக் கணக்கில் 134 மில்லியன் டொலர் உபரி பதிவாகியிருந்த போதிலும், செப்டம்பர் மாதத்தில் மீண்டும் 128 மில்லியன் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், 2025 செப்டம்பர் மாதத்தில் பதிவான 194 மில்லியன் டொலர் பற்றாக்குறையுடன் ஒப்பிடும்போது, இந்தச் செப்டம்பர் மாத பற்றாக்குறை ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலேயே உள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டுகிறது.

Recent Articles

Back to top button