துறைமுகத்தில் இறக்கும் விலைக்கு எரிபொருளை வழங்க முடியாது.. உலகில் எந்த நாட்டிலும் அப்படி இல்லை, அவை பொய் வாதங்கள் – எரிசக்தி அமைச்சர்

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டு பொருளாதாரத்தையும் நுகர்வோரையும் பாதுகாப்பதற்காக அக்டோபர் முதல் டிசம்பர் வரை மூன்று மாத காலத்தில் டீசல் மானியத்திற்காக மட்டும் ரூ. 41 பில்லியன் கூடுதல் தொகையை அரசாங்கம் ஒதுக்கவுள்ளதாகவும், அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
தெரண ‘360’ அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் அரசாங்கம் தலையிட்டு நேரடி மானியங்களை வழங்குவது ஆகிய இரண்டு முறைகளிலும் நிதி ரீதியாக எந்தவொரு மாற்றமும் இல்லை சுட்டிக்காட்டிய அமைச்சர், இரு முறைகளிலும் இறுதியில் இழக்கப்படும் வருமானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியது பெருங் கருவூலமே (Mahabhandagara) என்பதை வலியுறுத்தினார்.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு நெருக்கடி ஏற்பட்ட ஆரம்ப கட்டத்திலேயே அரசாங்கம் தலையிட்டு ரூ. 57 பில்லியன் மாபெரும் தொகையை எரிபொருள் மானியத்திற்காக ஒதுக்க நடவடிக்கை எடுத்திருந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.
பெட்ரோலைக் காட்டிலும் டீசல் என்பது நாட்டின் பொதுப் போக்குவரத்து, விவசாயம் மற்றும் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தி அமைப்புடன் நேரடியாகத் தொடர்புடைய காரணியாக இருப்பதால், டீசலுக்கான மானியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் விளக்கமளித்தார். அதற்கமைய, ஒதுக்கப்பட்ட ரூ. 41 பில்லியன் தொகையிலிருந்து அக்டோபர் மாதத்திற்கு ரூ. 15 பில்லியன் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களுக்காக மீதமுள்ள ரூ. 26 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை ஸ்திரமான மட்டத்தில்தொடர்ந்து பேண முடிந்த போதிலும், கட்டுப்படுத்த முடியாத வெளிக்காரணியான மத்திய கிழக்கு போர் மோதல்கள் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை சடுதியாக உயர்ந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்று கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தை மீண்டும் பெரும் கடனில் சிக்கவைக்காமல், முறையான நிதி முகாமைத்துவத்துடன் கூடிய கருவூல ஒதுக்கீடுகள் மூலம் இந்த நெருக்கடியை அரசாங்கம் தணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
துறைமுகத்தில் இறக்கப்படும் விலையிலேயே நுகர்வோருக்கு எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என்ற வாதம் முற்றிலும் நடைமுறைக்கு சாத்தியமற்றது எனக் குறிப்பிட்ட அமைச்சர், உலகின் சந்தைப் பொருளாதாரம் உள்ள எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான முறை நடைமுறையில் இல்லை எனவும், கடந்த காலத்தில் லிபியா போன்ற எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் கூட அரசு ஆதரவை அடிப்படையாகக் கொண்ட கடுமையான மானியக் கொள்கை மட்டுமே நடைமுறையில் இருந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.
குறிப்பு: சிங்கள மற்றும் ஆங்கிலப் பிரதிகளுக்கு இடையில் ஏதேனும் முரண்பாடுகள் இருப்பின் சிங்களப் பிரதியே இறுதியானது.



