News

கைது செய்யப்பட்டுள்ள கைவாறு முத்து,  கொலைகள், கடத்தல், பாலியல் வல்லுறவு, துப்பாக்கிச் சூடுகள், பெட்ரோல் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் மரண அச்சுறுத்தல்கள் போன்ற குற்றங்களுடன் தொடர்புடையவர் ; பொலிஸ்

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இருந்து நாடுகடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட “கைவாறு முத்து” என அழைக்கப்படும் மனோஜ் முத்துகுமார் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ள பல தீவிர குற்றச்செயல்கள் குறித்த விபரங்களை இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.


கடுவௌ, கொரவிட்ட வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான இந்தச் சந்தேகநபர், வெள்ளிக்கிழமை (6) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விமான நிலையப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.


பொலிஸாரின் கூற்றுப்படி, கொலைகள், கடத்தல், பாலியல் வல்லுறவு, துப்பாக்கிச் சூடுகள், பெட்ரோல் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் மரண அச்சுறுத்தல்கள் உட்பட பல தீவிர குற்றச்செயல்கள் தொடர்பில் இந்தச் சந்தேகநபர் தேடப்பட்டு வந்துள்ளார்.


சந்தேகநபருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பின்வரும் சம்பவங்களைப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்:

P
– 2013: அத்துருகிரிய பொலிஸ் பிரிவில் இளம்பருவச் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம்.
– 2016: மீகஹவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கொட பகுதியில் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை.
– 2024: நவகமுவ பொலிஸ் பிரிவில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு, பின்னர் துனாந்தஹேன பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டமை.
– 2024: நவகமுவ பொலிஸ் பிரிவில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றுக்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை.
– 2024: கொரதோட்ட பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுத் தாக்குதல்.
– ஏனைய குற்றச்சாட்டுகள்: தனிநபர்களுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்தல் மற்றும் மரண அச்சுறுத்தல் விடுத்தல்.
இந்தச் சம்பவங்களுடன் சந்தேகநபரைத் தொடர்புபடுத்தும் தகவல்களை விசாரணைகள் மூலம் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இக்குற்றங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தற்போது கடுவௌ மற்றும் ஹோமாகம நீதிமன்றங்களில் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் வைத்து கைது செய்யப்பட்டு, பின்னர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தார்.
அவர் வருகை தந்ததைத் தொடர்ந்து, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரைக் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப் பிரிவிடம் ஒப்படைத்தனர்.
தொடர் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சந்தேகநபர் தற்போது 72 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button