அமெரிக்க ராணுவத்தின் விசித்திரமான விமானம் கட்டுநாயக்கவிற்கு வருகை!

இந்து சமுத்திர பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பலிலிருந்து பறந்து வந்த அமெரிக்க கடற்படையின் அதிநவீன MV-22B Osprey ரக விமானம் நேற்று (07) மாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற போயிங் (Boeing) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த விசேட விமானம், ஹெலிகாப்டர் போலவும் மற்றும் சாதாரண நிலையான இறக்கைகளைக் கொண்ட விமானம் போலவும் செயல்படக்கூடிய அரிய தொழில்நுட்பத் திறனைக் கொண்டுள்ளது.
ஹெலிகாப்டர் போன்று செங்குத்தாக வானில் எழும்பி தரையிறங்கும் திறனும், சாதாரண விமானத்திற்குரிய அதிக வேகம் மற்றும் நீண்ட தூரம் பறக்கும் திறனையும் ஒரே நேரத்தில் பெற்றிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
பாரம்பரியமான விமான ஓடுபாதையின் உதவியின்றி தரையிறங்கவும், புறப்படவும் ஏதுவாக இதன் சுழலிகளை (rotors) தேவைகளுக்கு ஏற்ப செங்குத்தாகவும் மற்றும் கிடைமட்டமாகவும் திருப்பும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடல் எல்லைக்கு அப்பால், அதாவது நாட்டின் தெற்கு திசையில் சுமார் 50 கடல் மைல் தொலைவில் இந்து சமுத்திர பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த அமெரிக்க கடற்படை கப்பலிலிருந்து இந்த விமானம் நாட்டிற்குள் பறந்து வந்துள்ளது.



