News

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் உரிமைகள்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் உரிமைகள்: மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த CSS கோரிக்கை

கொழும்பு: 11.11.2026

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில்  நியமனம் பெற்று சென்ற ஆறு முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் மத மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்ந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL), சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு பல முக்கியமான பரிந்துரைகளை வழங்கியிருந்தது.

குறித்த பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தி, அரச சேவையில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் மதச் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துமாறு Centre for Social Studies (CSS) கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக CSS நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரை நேற்றைய தினம் (10.11.2026) சந்தித்து கலந்துரையாடியதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சுகாதார அமைச்சுக்கும், பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கையின் அனைத்து அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உத்தியோகத்தர்களின் மத, கலாசார மற்றும் பண்பாட்டு அடையாளங்களை மதிக்கும் உரிமை பாதுகாக்கப்படும் என CSS சுட்டிக்காட்டியுள்ளது.

இச்சந்திப்பின் போது, குறித்த விடயம் தொடர்பில் அமைச்சின் அதிகாரிகள், எதிர்வரும் 19.11.2026 ஆம் திகதிக்கு முன்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அமைச்சின் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

அரச நிறுவனங்களில் பணியாற்றும் எந்தவொரு உத்தியோகத்தரும் தங்களது மத மற்றும் கலாசார அடையாளங்களை பிரதிபலிக்கும் ஆடைகளை அணிவதற்கு தடைகள் ஏற்படாத வகையில் தெளிவான நிர்வாக வழிகாட்டுதல்கள் மற்றும் புதிய சுற்றறிக்கை விரைவாக வெளியிடப்பட வேண்டும் என CSS வலியுறுத்தியுள்ளது.

மேலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படத் தவறினால், சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை CSS ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Centre for Social Studies (CSS)
Media Release

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button