இலங்கையில் இஸ்ரேலிய மொசாட் உளவு நடவடிக்கைகள்.. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் குற்றச்சாட்டு..

இலங்கையில் இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கும், இஸ்ரேலிய உளவுத்துறையான ‘மொசாட்’ (Mossad) அமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடமளிப்பது நாட்டின் தேசிய பாதுகாப்பு, எதிர்காலம் மற்றும் இனங்களுக்கு இடையிலான சகவாழ்வுக்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இலங்கை அண்மையில் அறிமுகப்படுத்திய கட்டணமில்லா விசா நடைமுறையின் கீழ் இஸ்ரேலும் உள்வாங்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்னவென அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், கொழும்பு 07 பகுதியில் அமைந்துள்ள ‘சபாட் ஹவுஸ்’ (Chabad House) நிலையம் சட்டவிரோதமானது எனப் பிரதமர் முன்னர் தெரிவித்திருந்த போதிலும், அதனை இதுவரை மூடுவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் வினவினார்.
இஸ்ரேலியப் பிரஜைகளுக்கு இலவச இணையவழி (Online) விசா வழங்கும் தீர்மானத்தைக் கடுமையாக விமர்சித்த ரஹ்மான், பலஸ்தீனத்தில் 20,000 சிறுவர்கள் உட்பட ஒட்டுமொத்தமாக சுமார் 75,000 பேரைக் கொன்று குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை (IDF) வீரர்கள் ஓய்வெடுப்பதற்காக இந்நாட்டிற்கு வருவதற்கு இதன் மூலம் வழிவகுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
ஐரோப்பா, கனடா மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளைக் கட்டுப்படுத்தி வருவதாகவும், இஸ்ரேலிய அரசாங்கம் மேற்கொள்வதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) கூட குற்றம் சாட்டியுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கொழும்பு ‘சினமன் ரெட்’ (Cinnamon Red) ஹோட்டலுக்கு முன்பாக அமைந்துள்ள ‘சபாட் ஹவுஸ்’ நிலையம் தொடர்ந்தும் எவ்வாறு திறந்திருக்கின்றது எனக் கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர், முன்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வழங்கப்பட்ட பாதுகாப்பிற்குப் பதிலாக தற்போது அதற்குச் சாதாரண பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
நாட்டில் ஆட்சிக்கு வந்த எந்தவொரு முன்னைய அரசாங்கமும் வழங்காத அளவிற்குப் பரந்தளவிலான இடவசதியை தற்போதைய நிர்வாகத்தின் கீழ் இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளதாகக் கூறிய அவர், இந்நிலைமை இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் இன நல்லிணக்கத்தைக் கடுமையான ஆபத்திற்கு உள்ளாக்கும் என எச்சரித்தார்.
கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையின் அறுகம்பை மற்றும் ஏனைய சுற்றுலா வலயங்களில் தங்கியிருந்த இஸ்ரேலியப் பிரஜைகளை இலக்கு வைத்துப் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் நிலவுவதாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, நாட்டில் தங்கியிருக்கும் இஸ்ரேலியப் பிரஜைகள் மற்றும் அவர்கள் நடத்திச் செல்லும் பிரார்த்தனை நிலையங்கள் குறித்துத் தீவிரமான பொதுமக்கள் மற்றும் அரசியல் விவாதங்கள் எழுந்தன.
இலங்கை பாரம்பரியமாக ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீன அரசிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதுடன், விவசாயம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறைகளில் இஸ்ரேலுடனும் இராஜதந்திர உறவுகளைப் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



