News

நேற்றைய தினம் மட்டும் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் (13 வயது சிறுமி உள்ளிட்ட) ஐந்து பெண்கள் உட்பட  மொத்தமாக எட்டு பேர் உயிரிழப்பு

நாடளாவிய ரீதியில் புதன்கிழமை (25) இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துகளில் ஐந்து பெண்கள் மற்றும் 13 வயது சிறுமி உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
.
உயிரிழந்தவர்கள் 13 முதல் 80 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், சிறுவன் ஒருவன் உட்பட பலர் இந்த விபத்துகளில் காயமடைந்துள்ளனர்.
.
குளியாப்பிட்டி, ருவன்வெல்ல, கறுவாத்தோட்டம், தலங்கம, மஹபாகே, கிராண்ட்பாஸ், நோர்வூட் மற்றும் மஹவ ஆகிய பகுதிகளிலேயே இந்த உயிரிழப்பு விபத்துகள் பதிவாகியுள்ளன.
.
குளியாப்பிட்டி: புகல்ல சந்திக்கு அருகில் லொறியொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதிய பின்னர் முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் 73 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், சிறுவன் ஒருவன் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
.
ருவன்வெல்ல: அவிசாவளை – கேகாலை வீதியில் பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில், ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான பெண் உயிரிழந்துள்ளார்.
.
கறுவாத்தோட்டம்: கொழும்பு ஜே.ஓ.சி (J.O.C.) சந்திக்கு அருகிலுள்ள பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட இரு பெண்கள் மீது பஸ் ஒன்று மோதியதில், கோட்டே பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் உயிரிழந்ததுடன் மற்றைய பெண் காயமடைந்துள்ளார்.
.
தலங்கம: இரண்டு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த கம்புருகமுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளை செலுத்திய பெண்ணும் காயமடைந்துள்ளார்.
.
மஹபாகே: கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் இடதுபுறமாக திரும்ப முற்பட்ட கொள்கலன் வாகனத்துடன் (Prime Mover) துவிச்சக்கர வண்டி மோதியதில், ராகம பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
.
கிராண்ட்பாஸ்: ஆர்தர் டி சில்வா மாவத்தையில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில், களனி பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
.
நோர்வூட்: வென்ச்சர் பகுதியில் ஓடிக்கொண்டிருந்த கெப் ரக வாகனத்தின் பின்பகுதியில் இருந்து தவறி விழுந்த 13 வயது சிறுமி, டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
.
மஹவ: நிக்கவெரட்டிய – சியம்பலாங்கமுவ வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில், மீரிகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த பெண்ணும் காயமடைந்துள்ளார்.
.
இந்த ஏழு உயிரிழப்பு விபத்துகள் தொடர்பில் எட்டு சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
.
எட்டு விபத்துகள் குறித்தும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button