நேர்மையாகவும் சுயாதீனமாகவும் பணியாற்ற முடியாது எனத் தெரிவித்து மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் இராஜினாமா

மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜாசிங்க தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் கடிதத்தைக் கையளித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று (26) தலைவரிடம் வினவியபோது, பல்வேறு தரப்பினரிடமிருந்து ஏற்படும் அழுத்தங்கள் காரணமாகவே தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்யத் தீர்மானித்ததாகத் தெரிவித்தார்.
தனது பதவிக்கான கடமைகளை மிகவும் நேர்மையாக நிறைவேற்றியதாகவும், நடுநிலையாகவும் பக்கச்சார்பின்றியும் பணியாற்றும்போது அரசியல் ரீதியான அழுத்தங்கள் ஏற்படுவதால் தொடர்ந்தும் அப்பதவியில் நீடிப்பதில் பயனில்லை எனக் கருதியே தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யத் தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.
2024 ஆம் ஆண்டின் இறுதியில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், மேல் மாகாண ஆளுநரினால் காமினி ஜாசிங்க இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
தனது பதவிக்காலத்தில் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்துவதைத் தடுப்பதற்காகத் திடீர் சோதனைகளை முன்னெடுப்பதற்கும், Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் பேருந்துகளின் ஒழுக்கம் மற்றும் தரத்தை உயர்த்துவதற்கும் அவர் பல சிறப்பான நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.



