அடுத்த ஆண்டில் 3.8 டிரில்லியன் கடன் வாங்குகிறோம்..- ஜனாதிபதி

அடுத்த ஆண்டில் ரூபா 3,800 பில்லியன் தொகையைக் கடனாகப் பெற எதிர்பார்ப்பதாகவும், அதே ஆண்டில் ரூபா 4,850 பில்லியன் கடன் மற்றும் வட்டித் தவணைகளைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
‘வரவு-செலவுத் திட்டமும் உழைக்கும் மக்களும்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் மூலதனச் செலவினங்களுக்காக மேலும் 2,000 பில்லியன் ரூபாவும், சமூக நலன்புரி நடவடிக்கைகளுக்காக 1,400 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த அனைத்துச் செலவுகளையும் ஈடுசெய்ய வேண்டிய நிலை கடன் நிதி மூலமே ஏற்பட்டுள்ளதாகவும் வலியுறுத்தினார்.
கடன் செலுத்துதல், மூலதனச் செலவினம், சம்பளம் மற்றும் சமூக நலன்புரி ஆகிய முக்கிய துறைகளை மிகவும் சமநிலையுடன் ஆராய்ந்தே இம்முறை வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அங்கு தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் விளக்கமளித்தார். பல நாட்களாகத் தரவுகள் மற்றும் வரைபடங்களைப் பகுப்பாய்வு செய்து தயாரிக்கப்பட்ட இந்த வரவு-செலவுத் திட்டச் சமநிலையைக் குலைக்க முயற்சித்தால், அது மற்றொரு பக்கத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அதன்படி, சம்பளச் செலவினங்களை அதிகரித்தால், அதற்கான பணத்தை மூலதனச் செலவினங்களிலிருந்து எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும், அவ்வாறான ஒரு நடவடிக்கையை எடுக்கும் வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அரசாங்கத்தின் செலவினங்களுள் கடன் மற்றும் வட்டித் தவணைகளைச் செலுத்துவதற்கான ரூபா 4,850 பில்லியன் தொகையை எவ்வகையிலும் குறைக்கவோ மாற்றவோ முடியாது என்றும், அரசாங்கம் அதனைச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களைக் குறைக்க முடியாது என்றும், சம்பள உயர்வுகளுடன் சேர்த்து அதற்காக ரூபா 2,185 பில்லியன் தொகையைச் செலுத்த அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதன்படி, அரசாங்கத்திடம் எஞ்சியிருப்பது சமூக நலன்புரி மற்றும் மூலதனச் செலவினம் ஆகிய துறைகள் மட்டுமே எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மூலதனச் செலவினம் என்பது நாட்டின் எதிர்கால முதலீடாக இருப்பதால் அதனைக் குறைக்க அரசாங்கம் எவ்வகையிலும் தயாராக இல்லை என்றும் வலியுறுத்தினார். இலங்கையின் மிகப்பெரிய முதலீட்டாளர் அரசாங்கம் என்பதால், அரசாங்கம் தனது முதலீட்டு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.



