News

முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் கேட்க வேண்டும்

எம்.எஸ். தீன் –

இந்த நாட்டில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும், யார் ஜனாதிபதியாக வந்தாலும் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு என்பது எட்டாக் கனியாகவே இருந்து வருகின்றது. அதிலும் முஸ்லிம்களின் பிரச்சினை என்றால் அது குறித்து ஒரு கலந்துரையாடலைக் கூட செய்வதற்கு கடந்த காலங்களிலும் சரி, தற்போதும் சரி, ஆட்சியாளர்கள் தயாரில்லாத நிலைமையே காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு சில வீதிகளை அமைத்தல் உள்ளிட்ட வழக்கமான நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்களை ஆட்சியாளர்கள் மேற்கொண்டாலும், முஸ்லிம்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கவில்லை.

ஆட்சியாளர்கள் இவ்வாறு முஸ்லிம்களின் விவகாரங்களில் நடந்து கொண்டிருப்பதற்கு அவர்களுடன் பங்காளிகள் என்றிருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் முக்கிய காரணமாகும். முஸ்லிம்கள் மீதான இந்தப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் ஆட்சியாளர்களுக்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாக்களித்த காலங்களிலும் நடந்துள்ளது. அதுமட்டுமன்றி முஸ்லிம் கட்சிகள் பங்காளிகள் என்றிருந்த வேளைகளிலும் நடந்துள்ளன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுக்கும், பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர்களுக்கும் முஸ்லிம்கள் அதிகப்படியான வாக்குகளை வழங்கினார்கள். ஆயினும், முஸ்லிம்களின் அந்தஸ்து இந்த ஆட்சியாளர்களிடமும் கிடைக்காத நிலையே காணப்படுகின்றது. ஒரு சமூகம் தனக்குரிய உரிமைகளை கேட்பதை இனவாதமாக சித்தரிப்பதற்கு இன்று அதிகம் பேர் வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு சமூகத்தின் உரிமைகளை மறுப்பதே இனவாதமாகும்.

கடந்த காலங்களில் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டததாலேயே ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது. சிறுபான்மையினரை ஆட்சியாளர்கள் நீதியின் அடிப்படையில் நடத்தியிருந்தால் நாடு பொருளாதாரத்திலும், உலகில் நன்மதிப்பிலும் உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கும். ஆனால், இன்று நாடு எல்லா வகையிலும் பின்தங்கியே காணப்படுகின்றது.

கடந்த வாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வட மாகாணத்துக்கு சென்றிருந்தார். அங்குள்ள அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், பொது மக்கள் பலரையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.

இவ்வாறு ஜனாதிபதி ஒருவர் வட மாகாணத்துக்கு செல்வது என்பது புதிய விடயமல்ல. இதற்கு முதலும் ஜனாதிபதியாக இருந்தவர்கள் வட மாகாணத்திற்கு சென்றுள்ளார். அன்றும், இன்றும் ஆட்சி செய்தவர்களிடையே பல விடயங்களில் ஒற்றுமையை காண்கின்றோம். அதில் ஒன்றுதான் தற்போதைய ஜனாதிபதியின் வட மாகாண விஜயமாகும். அது போலவே சிறுபான்மையினரின் பிரச்சினைகளை கேட்டறிந்துவிட்டு, காலத்தை கடத்திக் கொண்டு போவது.

ஆனால், எந்தவொரு ஜனாதிபதியும் கிழக்கு மாகாணத்திற்கு சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டுக் கொண்ட வரலாறு கிடையாது. கிழக்கு மாகாணத்திற்கு வருகை தருவதாக இருந்தாலும். சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலேயே மக்கள் சந்திப்பையும், கூட்டங்களையும் நடத்தியுள்ளார்கள். ஆனால், சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களுக்கு வருகை தருவதில்லை.

ஆனால், ஜனாதிபதி தேர்தல் காலங்களில் எல்லா வேட்பாளர்களும் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து மூவின மக்களுக்கும் அவர்களின் பிரதேசங்களில் கூட்டங்களை நடத்தியுள்ளார்கள். தமிழ், முஸ்லிம்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை முன்வைப்போம் என்று வாக்குறுதிகளை வழங்கினார்கள். தேர்தல் முடிந்ததும் அந்த வாக்குறுதிகளையும் மறந்துவிடுவார்கள்.

இலங்கையில் மூவின மக்களும் வாழ்ந்தாலும் அவர்களின் பிரச்சினைகள் மாகாணத்துக்கு மாகாணம் வேறுபட்டதாகவே இருக்கின்றன. கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கும், ஏனைய மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குமிடையே பாரிய வேறுபாடுகள் உள்ளன. இவ்வாறு காணப்படுகின்ற பிரச்சினைகளை முஸ்லிம்கள் உருவாக்கவில்லை. மாறாக ஆட்சியாளர்களே உருவாக்கினார்கள்.

முஸ்லிம்கள் நாட்டுக்கு விசுவாசம் காட்டுவதில் ஏனைய இனங்களுடன் ஒப்பிடுகையில் எந்த வகையில் குறைத்து மதிப்பிடும் நிலையில்லை. ஆனால், அரசியல் வெற்றிகளுக்காக முஸ்லிம்களை நாட்டுக்கு ஒவ்வாதவர்கள் என்று சித்தரித்தே வந்துள்ளார்கள்.

முஸ்லிம்களில் நிர்வாக சேவையில் சிரேஷ்டமானவர்கள் இருக்கின்ற போதிலும், அவர்களுக்குரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை. எந்தவொரு மாவட்டத்திற்கும் முஸ்லிம் ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்க விருப்பமில்லாதவர்களாகவே ஆட்சியாளர்கள் இருந்துள்ளார்கள். இன்றும் அதுவே நிலைமையாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக ஐ.எம்.ஹனிபா நியமிக்கப்பட்டார். ஆயினும் அவரால் சிறிது காலமே அரசாங்க அதிபராக செயற்பட முடிந்தது. கோட்டாபய ஆட்சியில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இவ்வாறு திட்டமிட்டு முஸ்லிம்களை புறக்கணிப்படுவதை சுட்டிக்காட்டும் போதும், முஸ்லிம்களின் உரிமைகளை வழங்க வேண்டுமென்றும் குரல் கொடுக்கின்ற போது அதனை ஒரு இனவாதக் கோரிக்கையாக காட்டுவதற்கு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனை ஒரு சில முஸ்லிம்களும் ஆதரித்துக் கொண்டு, முஸ்லிம் சமூகத்தின் மீது விரல் நீட்டிக் கொண்டிருக்கின்ற இழிநிலையையும் காணக் கூடியதாக இருக்கின்றது.

இன்றைய ஆட்சியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் அமைச்சரவை அந்துள்ள அமைச்சர் பதவிகள் வழங்கப்படவில்லை. ஆயினும் ஆட்சியாளர்கள் பக்கம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்;. அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி பேசுவதில்லை.

சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசாதிருப்பது என்பது இன்று மட்டுமன்றி, இதற்கு முன் இருந்த எல்லா ஆட்சிக் காலங்களிலும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதில்லை. அமைச்சர்களாக இருந்தார்களே அல்லாமல் ஆகுமான வேலைகளை சமூகத்துக்கு செய்யவில்லை.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை இழந்துள்ளார்கள். இதற்குரிய எந்தவொரு நடவடிக்கைகளையும் ஆட்சியாளர்கள் எடுப்பதற்குரிய அழுத்தங்களை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொடுக்கவில்லை. சமூகத்தின் பிரச்சினைகளை பற்றி பேசாது, பைகளை நிரப்பும் வேலைகளிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.

இவர்களின் இத்தகைய நடவடிக்கைகளினால் முஸ்லிம் சமூகம் கேட்பதற்கு ஆளில்லாத அவலத்தை அடைந்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் பங்காளிகளாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிப் பதவியில் இருந்தவர்களை முஸ்லிம் பிரதேசங்களுக்கு அழைத்து வந்து, முஸ்லிம் புத்திஜீவிகள், அரசியவாதிகள் உள்ளிட்ட எந்த தரப்பினரோடும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

ஆகவே, முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளும் கேட்கப்பட வேண்டும். அதற்கான கலந்துரையாடல்களை ஆட்சியாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்குரிய அழுத்தங்களை இன்றைய ஆட்சியில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொடுக்க வேண்டும்.

Recent Articles

Back to top button