ஊழியர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிடில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம் ! அரசுக்கு எச்சரிக்கை

பேராதனைப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊழியர் பிரச்சினைகளை கலந்துரையாடி உடன்பாட்டின் மூலம் தீர்க்க முயற்சித்தாலும் தற்போதைய அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் மற்றும்பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அதற்கு தயாராக இல்லையெனில் நாம் தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுக்க பின்வாங்க மாட்டோம் என்பதாக கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு வலியுறுத்துவதாக அதன் பிராதான தலைவர் ரீ.ஏ.டீ.சுரன் ஜீவ தெரிவித்தார்.
பேராதனைப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பினால் நேற்று (11) காலை பல்கலையில் அமைந்துள்ள சங்க காரியாலத்தில் இடமெற்ற ஊடக சந்திப்பின் போதே பிராதான தலைவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அங்கு, தொடர்ந்துரையாற்றிய
பிராதான தலைவர் மேலும் குறிப்பிடுகையில்.:
தற்போதைய அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளபடி எதுர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஊழியர்களின் முந்தைய சம்பள ஏற்றத்தாழ்வுகளை நீக்காமல் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் அந்த ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும் என்பதோடு அதன் மூலம் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கடும் அநீதி ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.
மேலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக முறைமையின் தொழிற்சங்கங்களுடன்
கடந்த 2024.07.15 கூட்டுஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில்
பல்கலைக்கழக முறைமையின் கல்விசாரா ஊழியர்கள் தமது அடிப்படை சம்பள ஏற்றத்தாழ்வுகளை நீக்குமாறு வலியுறுத்தி 75 நாட்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு, அந்த தொழிற்சங்க நடவடிக்கை முடிவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவுடன் உடன்படிக்கை ஒன்றில் கையொப்பமிடப்பட்டது.
ஆகவே, அந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும். ஆனால் அந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அல்லது அது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தவிர்த்து வருகிறது.
மேலும் ஆட்சேர்ப்பு நடைமுறை பல்கலைக்கழக மானியங்கள் பல்கலைக்கழக முறைமையின் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு நடைமுறை தொடர்பாக கடும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆணைக்குழுவின் தலைவரிடம் பல முறை கடிதங்கள் மூலம் கலந்துரையாடல் கோரப்பட்டும் இதுவரை எந்தவொரு வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை.
பல்கலைக்கழக முறைமையில் கல்விசாரா ஊழியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படாமை தொடர்பாக
தற்போது பல்கலைக்கழக முறைமையில் கல்விசாரா ஊழியர் வெற்றிடங்கள் 25% க்கு அண்மித்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் அந்த வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படாததால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 480 க்கும் மேற்பட்ட கல்விசாரா ஊழியர் வெற்றிடங்கள் உள்ளன. இந்த பதவிகளுக்கு உள்ளக அல்லது வெளிவாரி ஆட்சேர்ப்புகள் செய்யப்படாததால் மாணவர்களுக்கான சேவை வழங்கலில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
மேலும், ஏனைய பல்கலைக்கழகங்களிலிருந்து பல வருடங்களாக பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் பெற காத்திருக்கும் ஊழியர்கள் வராமைக்கு காரணம் அந்த பல்கலைக்கழகங்களில் ஆட்சேர்ப்பு செய்யப்படாமையாகும்.
இதன் காரணமாக அந்த ஊழியர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டுகிறேன்.
பேராதனைப் பல்கலைக்கழகம் ஒரு தங்குமிட பல்கலைக்கழகம் என்பதோடு, தற்போதுள்ள உத்தியோகபூர்வ விடுதிகள் 70 வருடங்களுக்கும் மேற்பட்ட பழைய கட்டிடங்கள் ஆகும். இந்த விடுதிகள் மற்றும் கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டால் இன்னும் பல வருடங்கள் பயன்படுத்த முடியும் என்பதால் இந்த உத்தியோகபூர்வ விடுதிகள் மற்றும் கட்டிடங்களின் புனரமைப்புக்கு இந்த வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம்.
நாம் புதிய கட்டிடங்களை நிர்மாணிக்க அல்ல, கட்டிடங்களை பாதுகாக்க கோருவதாக இந்த ஊடக சந்திப்பில் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
சங்கத்தின் பொது செயலாளர் வீ. கிருஷ்ண மூர்த்தி இங்கு உரையாற்றுகையில்:
தாய்மொழியில் தகவல்களை அறியும் உரிமையை பாதுகாப்பதற்காக அனைத்து சுற்றறிக்கைகள், நிறுவன விதிக்கோவை, சம்பளப் பட்டியல்கள் மற்றும் அறிவித்தல்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிடப்படாமை
தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் கடிதங்கள் ஆங்கில மொழியில் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு(UGCல) இணையத்தளத்தில் இன்று வரை ஆங்கில மொழியில் மட்டுமே தாபன விதிக்கோவை குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் சமீபத்தில் அது சிங்கள மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியில் இதுவரை குறிப்பிடப்படவில்லை.
இது தமிழை தாய்மொழியாக பயன்படுத்தும் ஊழியர்களின் அடிப்படை உரிமை மீறலாகும். இந்த விடயம் பல வருடங்களாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டும் அது திருத்தப்படவில்லை.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக பல கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட்டும், அந்த விடயங்களை கலந்துரையாட பல சந்தர்ப்பங்களில் கடிதங்கள் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டும் தற்போதைய ஆணைக்குழு (UGC )தலைவர் இதுவரை தொழிற்சங்கங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
மேலும், அந்த விடயங்கள் தற்போதைய அரசாங்கத்தின் கல்வி அமைச்சருக்கும் எமது ஊழியர் பிரச்சினைகளை கலந்துரையாட கடிதங்கள் அனுப்பப்பட்டும் கலந்துரையாடல் வாய்ப்பு கிடைக்கவில்லை. நாம் தொழிற்சங்கங்களாக ஊழியர் பிரச்சினைகளை கலந்துரையாடி உடன்பாட்டின் மூலம் தீர்க்க முயற்சித்தாலும் தற்போதைய அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் மற்றும் UGC தலைவர் அதற்கு தயாராக இல்லையெனில் நாம் தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுக்க பின்வாங்க மாட்டோம் என்பதை இதன் மூலம் தற்போதைய அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம் எனசங்கத்தின் பொது செயலாளர் மேலும் குறிப்பிட்டார். (எம்.ஏ.ஏ)



