திருமண வயதை 18 ஆக திருத்தவும் முஸ்லிம் பெண்களுக்கும் தங்களின் விவாக சான்றிதழில் கைச்சாத்திடும் உரிமை இருக்க வேண்டும் என்பதிலும் முஸ்லிம் சமூகத்தில் உடன்பாடு இருக்கிறது

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தத்தில் திருமண வயதை 18 ஆக திருத்தம் மேற்கொள்ளவும் முஸ்லிம் பெண்களுக்கும் தங்களின் விவாக சான்றிதழில் கைச்சாத்திடும் உரிமை இருக்க வேண்டும் என்பதிலும் முஸ்லிம் சமூகத்தில் உடன்பாடு இருக்கிறது என புதிய ஜனநாயக முன்னணி எம்.பி. பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் 1951ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. என்றாலும் தற்போது காலத்துக்கு ஏற்றவகையில் அதில் திருத்தங்களை மேற்கொள்ள நீண்டகாலமாக கலந்துரையாடி வருகிறோம். அதுதொடர்பான குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்துக்கு தேவையான திருத்தங்களை கொண்டுவர தவறியமைக்கு நாங்கள் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். திருத்தங்களை மேற்கொள்ளும்போது ஒருசில விடயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.
குறிப்பாக திருமண வயது தொடர்பில் நாட்டில் இருக்கும் பொதுவான சட்டம் 18 வயதாகும். முஸ்லிம் சமுகத்திலும் திருமண வயதை 18ஆக திருத்துவதற்கு உடன்பாடு இருக்கிறது. அதேபோன்று விவாக சான்றிதழில் கையெழுத்திடுவது பெண்களின் உரிமை . முஸ்லிம் பெண்களுக்கும் தங்களின் விவாக சான்றிதழில் கைச்சாத்திடும் உரிமை இருக்க வேண்டும். இந்த திருத்தத்தை மேற்கொள்ள சமூகத்தில் உடன்பாடு இருக்கிறது. காதி நீதிமன்றங்களில் பெண்களும் அதில் நீதிபதியாக வருவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றார்.

