நாட்டின் வீழ்ச்சியை எதிர்பார்த்து இருக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிளை கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி

இலங்கை மீது அமெரிக்கா உயர்ந்த வரிகளை விதிக்கும் என சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்த கருத்துகளை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று (ஆகஸ்ட் 07) நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்தார். எதிர்க்கட்சிகள் நாட்டின் மீட்சிக்கு ஆதரவளிக்காமல், நாடு சரிவடைய வேண்டும் என விரும்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
“முதலில் இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தின் போது கொழும்பில் குண்டு வெடிப்புகள் நிகழும் என எதிர்பார்த்தீர்கள். பின்னர் ஈரான்-இஸ்ரேல் மோதலின் போதும், இப்போது அமெரிக்க வரிகள் உயரும் எனக் கூறுகிறீர்கள். இதுவே உங்கள் விருப்பமாக இருந்தது,” என ஜனாதிபதி கூறினார்.
“இரு நாட்களுக்கு முன், அமெரிக்க வரிகள் 44% ஆக உயரும் எனக் கூறினர். இதுவே அவர்களின் ஆசையாக இருந்தது. நீங்கள் எப்போதும் இந்த நாடு பொருளாதார ரீதியாக சரிய வேண்டும் என கனவு காண்கிறீர்கள். ஆனால், எதுவும் சரியவில்லை. பொருளாதார சரிவைப் பற்றி கனவு காண்பதை நிறுத்துங்கள். உங்கள் அரசியல் பார்வையை மாற்றிக் கொள்ளுங்கள்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக, எதிர்க்கட்சியினர் ஆகஸ்ட் அல்லது டிசம்பரில் புதிய ஜனாதிபதி பதவியேற்பார் எனக் கூறிய கருத்துகளையும் ஜனாதிபதி கேலி செய்தார். குறிப்பாக, SJB நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமின் கூற்றுகளை சுட்டிக்காட்டி, அவர்களின் தவறான கணிப்புகளை விமர்சித்தார்.

