காஸாவை ஆக்கிரமிக்கும் பெஞ்சமின் நெதன்யாஹுவின் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

காசா நகரம், பாலஸ்தீன பிரதேசத்தின் வடக்கில் அமைந்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்மொழிந்த காஸா நகரத்தை ஆக்கிரமிக்கும் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தை இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் இதுவரை பகிரங்கமாக உறுதிப்படுத்தவில்லை. இது காசா பகுதியில் நடக்கும் போரை மேலும் தீவிரப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. இந்த தகவலை முதலில் ஆக்ஸியோஸ் (Axios) செய்தி தளம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இஸ்ரேல் பிரதமரின் அலுவலகத்தை மேற்கோள் காட்டி, “அரசியல்-பாதுகாப்பு அமைச்சரவை, ஹமாஸை தோற்கடிக்கும் பிரதமரின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேல் இராணுவம், காசா நகரத்தை கைப்பற்றுவதற்கு தயாராகும், அதேவேளையில், போர் நடவடிக்கைகள் இல்லாத பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும்” என்று ஆக்ஸியோஸ் நிருபர் பராக் ரவித், கூறினார்.
மேலும், பெயர் வெளியிடப்படாத மூத்த இஸ்ரேல் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, ரவித் தனது எக்ஸ் பதிவில், “காஸா நகரத்தில் உள்ள அனைத்து பாலஸ்தீன பொதுமக்களையும் அக்டோபர் 7 ஆம் தேதிக்குள் மத்திய முகாம்கள் மற்றும் பிற பகுதிகளுக்கு வெளியேற்றுவது இஸ்ரேலின் இலக்காக உள்ளது. காசா நகரில் மீதமுள்ள ஹமாஸ் போராளிகள் மீது முற்றுகை விதிக்கப்படும், அதேநேரத்தில் காசா நகரில் தரைவழி தாக்குதல் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
வாஷிங்டன் டிசியில் உள்ள அல் ஜசீராவின் நிருபர் ஷிஹாப் ரத்தன்ஸி, “காசாவை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் நகர்வு கடந்த சில நாட்களாகவே முன்னறிவிக்கப்பட்டு வந்தது” என்று கூறினார். “அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நெதன்யாகு விரும்புவதை செய்ய அனுமதி அளித்துள்ளார். இது இஸ்ரேலியர்களின் முடிவு என்று அவர் கூறியுள்ளார்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வியாழக்கிழமை, அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நெதன்யாகு, “இஸ்ரேல் முழு காசாவையும் கட்டுப்படுத்தும்” என்று கூறினார். மேலும், “இஸ்ரேல் காசாவில் ஆளும் அமைப்பாக இருக்க விரும்பவில்லை, மாறாக பாதுகாப்பு எல்லையை உருவாக்க விரும்புகிறோம். ஆட்சி பொறுப்பை ஒரு மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைப்போம்” என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னதாக, இஸ்ரேல் ஊடகங்களில், நெதன்யாகு முழு காசா பகுதியையும் ஆக்கிரமிக்கும் திட்டத்தை விரைவில் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. “காசாவை ஆக்கிரமிக்க முடிவு செய்யப்பட்டுவிட்டது” என்று இஸ்ரேலின் சேனல் 12 செய்தி தளம், நெதன்யாகுவின் அலுவலகத்தில் உள்ள மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி திங்கட்கிழமை அறிவித்தது.
நன்றி: ஆக்ஸியோஸ், அல் ஜசீரா

