ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவரை கைது செய்த சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்

*கொஸ்கொட சுஜியின் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பெண்ணால் பொலிஸ் உதவி பரிசோதகருக்கு மிரட்டல்*
அஹுங்கல்லை பொலிஸ் நிலையம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாகவும், பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகவும் கருதப்படும் கொஸ்கொட சுஜி என்பவரின் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்ணொருவரால், அஹுங்கல்லை பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் பரிசோதகருக்கு தொலைபேசி மூலம் மரண மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையின் தகவலின் பேரில், கடந்த 8ஆம் திகதி பலபிட்டிய பிரதேசத்தில், குறித்த உதவி பொலிஸ் பரிசோதகரால் 4200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்று மாலை, வாட்ஸ்அப் மூலம் அடையாளம் தெரியாத நபரொருவர், இந்த உதவி பொலிஸ் பரிசோதகரின் கைத்தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டு, கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவதற்கு வசதியாக ஹெரோயின் வழக்குப் பொருட்களை சமர்ப்பிக்குமாறு கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும், அவ்வாறு செய்யாவிட்டால், பயணத்தின்போது துப்பாக்கிச் சூடு அல்லது வாகன விபத்து மூலம் கொலை செய்யப்படுவார் என மிரட்டியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இது தொடர்பாக உதவி பொலிஸ் பரிசோதகர் அஹுங்கல்லை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
விசாரணைகளில், கைது செய்யப்பட்ட 42 வயதுடைய சந்தேக நபர், கொஸ்கொட சுஜியின் குழுவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணொருவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்லை பொலிஸ் நிலையம் மேற்கொண்டு வருகின்றது.

