ஹிஜ்ராபுர சோகங்கள்.. கெக்கிராவையில் உள்ள மீள்குடியேற்ற கிராமத்தில் மனிதர்களை கொல்லும் யானைகள் – மக்களின் உயிர்களை காப்பாற்றி தருமாறு ஜனாதிபதியிடமும், வனஜீவராசிகள் திணைக்களத்திடமும் கோரிக்கை

ஹிஜ்ராபுரம்..
கெக்கிராவை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கனேவல்பொல கிராமத்திற்கு அண்மையில் கௌரவ Rishad Bathiudeen அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட மீள்குடியேற்ற கிராமம்.
இலங்கையில் இடம்பெற்ற தீவிர இனமோதல்களில் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்த போது இந்த கிராமத்தில்தான் அவர்களுக்கான இருப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
பின்னர் அந்த மக்கள் தமது சக்திக்குட்பட்ட வகையில் சிறு சிறு வீடுகளை அமைத்துக்கொண்டு நிரந்தரமாகவே தங்கிவிட்டார்கள் இக்கிராமத்தில் 115 குடும்பங்களும், அவர்களுக்காக சிறு பள்ளிவாயலும் மட்டும் உண்டு அவர்களின் ஏனைய தேவைகளுக்காக கனேவல்பொல கிராமமே பிரதான இடமாக இருக்கிறது.
அண்மைய சில மாதங்கள் இருந்து இக்கிராமத்தில் யானைகளின் அட்டகாசம் மிக அதிகமாக இருக்கின்றது, மாலை ஆறு மணியாகிவிட்டால் மக்கள் அனைவரும் தமது வீடுகளுக்குள் பயத்துடன் ஒன்றித்து விடுவது வழக்கமாகிவிட்டது.
இதுபற்றி பலதடவைகள் இக்கிராம மக்கள் கனேவல்பொல வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்தும் அவர்களால் எந்தவொரு முறையான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் அசமந்த போக்கையே கடைப்பிடித்து வருகிறார்கள் இதனால் பல குடும்பங்கள் இக்கிராமத்தில் வாழ்வதற்கு அச்சப்பட்டு உயிரை காப்பாற்றிக்கொண்டால் போதுமென்று மீண்டும் மன்னார் மாவட்டத்தில் இருக்கும் தமது பழைய இடங்களுக்கே திரும்பிச்சென்று விட்டார்கள்.
வசதியும், வாய்ப்பும் அற்ற சில வறிய குடும்பங்கள் காட்டு யானைகளின் அச்சத்தின் மத்தியிலும் இறைவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் இன்னும் இக்கிராமத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
🔴 அப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்ப தலைவி ஒருவரை இன்று அதிகாலை 04.48 மணியளவில் யானையொன்று விரட்டிச்சென்று தூக்கிப்போட்டு மிதித்து கொன்றுள்ளது.
பொறுப்பற்ற கணவனினால் ஒதுக்கப்பட்டு யாசகம் பெறுவதின் ஊடாக வரும் வருமானத்தில் ஜீவனோபாயம் நடத்திக்கொண்டு தனியாக வாழ்ந்து வந்த அப்பெண்மணி காட்டு யானையின் கலவரத்தினால் இரவு நேரங்களில் வீட்டில் தனியாக உறங்க அச்சப்பட்டு பக்கத்து வீட்டிற்கு உறங்கச்சென்று அதிகாலை வேலை வீடு திரும்பிய நேரமே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
கனேவல்பொல கிராமத்தை அண்டியபகுதிகளில் இருந்து கடந்த நான்கு மாதங்களுக்குள் யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த 4வது நபர் இப்பெண்மணி.
ஏற்கனவே சகோதர இனத்தைச்சேர்ந்த மூன்று நபர்கள் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தடவையும் இவ்வாறான உயிரிழப்புக்கள் ஏற்படும்போது அதற்கு பொறுப்பான வனஜீவராசிகள் திணைக்களம் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வெறுமனே புதினம் பார்த்துவிட்டு கடந்து சென்றுவிடுகிறார்கள்.
இவர்களின் அசமந்த போக்கிற்கு இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கவேண்டும் கௌரவ ஜனாதிபதி Anura Kumara Dissanayake அவர்களே?
காட்டு மிருகங்களிடமிருந்து மக்கள் பாதுகாப்படையவும், மக்களிடமிருந்து காட்டு மிருகங்களை பாதுகாக்கவும், காடுகளையும், நதிகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்கவுமே வனஜீவராசிகள் திணைக்களத்தை நிறுவியிருக்கிறீர்கள் மிருகங்களிடமிருந்து மக்களை பாதுகாக்கவேண்டியது அவர்கள் பொறுப்பாக இருந்தாலும் அவர்கள் ஒரு போதும் அக்கறையெடுப்பதில்லை.
கௌரவ ஜனாதிபதி ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களின் குறைகளை அதிகாரிகளிடம் கேட்டு அவைகளை உடனடியாக நிவர்த்திக்க கட்டளையிடும் நீங்கள் அந்த பயணத்தின் ஒரு அங்கமாக நிச்சயமாக நீங்கள் அனுராதபுர மாவட்டத்திற்கும் வருவீர்கள்.
வனஜீவராசிகள் திணைக்களத்திடம் விசாரணைகளை செய்து இந்த உயிரிழப்புக்களை தடுத்துநிறுத்த வழிவகைகளை செய்து தருவீர்கள் என்று நம்புகிறோம்.
🔴குறித்த பெண்மணி யானையினால் தாக்கப்படும் காணொளியையும் இணைத்திருக்கிறேன்.



