News

மோசமான வானிலை குறித்து கடந்த 11 ஆம் திகதி முதல் பல்வேறு கணிப்புகள் கூறப்பட்டு வந்த நிலையில், அரச பொறிமுறை ஏன் இந்த சூழ்நிலையில் முறையாக நடந்து கொள்ளவில்லை? ஏன் இந்த கணிப்புகளை பொருட்படுத்தாமல் இருந்தது என்பதில் இன்று வரையிலும் பிரச்சினை காணப்படுகின்றது ;  மாத்தளையில் சஜித்

நாட்டின் அனர்த்த முகாமைத்துவ கொள்கையை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாத்தளை மாவட்ட மக்களின் சுக துக்கங்களை ஆராயும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (13) மாத்தளை, ரத்தோட்டை கைகாவல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.

இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாக அமைந்துள்ளது.

எதிர்காலத்தில் அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இயற்கை பேரிடர்கள் மற்றும் அனர்த்தங்கள் நிகழும் போது அவற்றில் இருந்து வரும் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இந்தப் பேரிடரின் போது எடுக்கப்பட்டதா இல்லையா என்பது கேள்விக்குறியாகவே இன்றுவரை காணப்படுகின்றன.

வளிமண்டலவியல் திணைக்களமும், வானிலை ஆய்வாளர்களும் கடந்த 11 ஆம் திகதி முதல் வானிலை நிலைமை படிப்படியாக மோசமடைந்து வருவதாக படிமுறை படிமுறையாக நாட்டுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்து வந்தனர்.

10 நாட்களில் இது புயலாக உருவெடுக்கும் என்றும் முன்னறிவித்தல் விடுத்திருந்தனர். இந்தக் காலகட்டத்தில், மக்களை வெளியேற்றவும், மக்கள் மீது வரும் பாதிப்புகளைக் குறைக்கவும், அனர்த்த முன்னாயத்தத் திட்டங்களை முன்னெடுக்கவும், அனர்த்தங்களால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை, பிரதேசங்களை முறையாக முகாமைத்துவம் செய்வதற்கும் இயலுமை காணப்பட்டிருந்த போதிலும், இதனை எதிர்கொள்வதற்குத் தேவையான இடர் முகாமைத்து திட்டமொன்று இந்த அரசாங்கத்திடம் இருக்கவில்லை.

ஆகையால் நாட்டிற்கு புதிய இடர் முகாமைத்துவ வேலைத்திட்டமொன்று அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புத்தளம் மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் டாப்ளர் ரேடார் கட்டமைப்புகளை நிறுவி, நவீன உபகரணங்களுடன் கூடிய வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடும் திறனும் இயலுமையும் கொண்ட பிராந்திய சர்வதேச மையமாக நமது நாட்டை மாற்ற வேண்டும்.

நாடு சுனாமி மற்றும் சூறாவளிகளால் பாதிக்கப்பட்டன. காலநிலை மாற்றம், சீரற்ற வானிலை காரணமாக பல பாதிப்புகளுக்கு நாம் முகம் கொடுத்துள்ளோம்.

ஆகையால் அனர்த்த முகாமைத்துவ கொள்கையை புதுப்பிக்க வேண்டிய தேவை எமக்கு காணப்படுகின்றன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அதேபோல், அனர்த்த முகாமைத்துவத் துறை ஏனைய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்துச் செயற்பட வேண்டும்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சை ஒரு நேரடி அமைச்சாக மாற்ற வேண்டும். கீழ் மட்டத்தில் இருந்து அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளை நியமித்து, ஆபத்தான பகுதிகளை அடையாளம் கண்டு, வலுவான கட்டமைப்பிற்குள் அமைந்த ஒரு திட்டத்தை வகுத்து முன்னெடுக்க வேண்டும்.

இந்த மோசமான வானிலை குறித்து கடந்த 11 ஆம் திகதி முதல் பல்வேறு கணிப்புகள் மீண்டும் கூறப்பட்டு வந்த நிலையில், அரச பொறிமுறை ஏன் இந்த சூழ்நிலையில் முறையாக நடந்து கொள்ளவில்லை மற்றும் இந்த கணிப்புகளை பொருட்படுத்தாமல் இருந்தது என்பதில் இன்று வரையிலும் பிரச்சினை காணப்படுகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button