News

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைதாகி விளக்கமறியலில் வைக்கபட்டுள்ள தேரர்கள் உள்ளிட்ட 10 பேரை உடனடியாக விடுதலை செய்யுங்கள் என  இத்தேபான தம்மாலங்கார தேரர் ஜனாதிபதிக்கு கடிதம்

(இராஜதுரை ஹஷான்)

புத்தசாசனத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட புண்ணிய பூமியிலேயே தேரர்கள் புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்தார்கள்.இந்த சாதாரண சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தேரர்கள் மீது குற்றஞ்சுமத்தியுள்ளமை புத்தசாசனத்துக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதியாகும். இந்த விவகாரத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களும், ஆளும் தரப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டார்களே தவிர ஏனைய இனத்தவரோ அல்லது மதத்தவரோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமசிறி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் கலாநிதி இத்தேபான தம்மாலங்கார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தேரர்கள் புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்தார்களே தவிர வேறேதும் குற்றமிழைக்கவில்லை. ஆகவே அரசாங்கத்தின் தலையீட்டுடன் விளக்கமறியலில் உள்ள தேரர்கள் உட்பட 10 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

திருகோணமலை புத்தர் விலை விவகாரம், தமிழ் புலம்பெயர் அமைப்புக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட போராட்டமே தவிர ஏனைய இனத்தவர்களோ அல்லது மதத்தவர்களோ இவ்விடத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

புத்தர்சிலையை பிரதிஸ்டை செய்த பிக்குவுக்கு குறித்த விகாரை தொடர்பில் சட்ட ரீதியான உரிமை உள்ள நிலையில்,அது தற்போது போதியாக வடிவமைக்கப்பட்டு வழிபாடுகளும் அங்கு இடம்பெறுகிறது.

சுனாமி அனர்த்தத்துக்கு பின்னர் அவ்விடத்தில் இருந்த பழைய கட்டத்துக்கு பதிலாக அதாவது கட்டடத்தை புனரமைத்தல் புதிய நிர்மாணிப்பு என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானதொரு கருத்தாகும்.

குறித்த சம்பவத்தில் பொலிஸார் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதாலும், ஒரு தரப்பினரது அரசியல் ஆலோசனைக்கு அமைய செயற்பட்டுள்ளதாலும் இந்த பிரச்சினை தீவிரமடைந்துள்ளது என்று நம்புகிறேன்.

சட்டமா அதிபரின் ஆலோசனைகளை புறக்கணித்து அவர்கள் செய்யாத குற்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்டு பொலிஸார் கடுமையான நிலைப்பாட்டில் இருப்பது பொலிஸாரின் நேர்மையான நிலைப்பாடு என்று ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜனாதிபதி அவர்களே ‘ இந்த தேரர்கள் புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்தது, கடந்த கால அரசர்கள் உயிரை கொடுத்து பாதுகாத்த புனித பூமியில் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.அவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளானது, புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்வதற்கு தவிர வேறேதும் குற்றமிழைப்பதற்கல்ல,

இந்த சாதாரணதொரு விடயத்தை அடிப்படையாகக் கொண்டு நடக்காத சம்பவங்களை உள்ளடக்கி குற்றம் சுமத்தி அரசாங்கத்தின் தலையீட்டுடன் இடம்பெறும் இந்த செயற்பாடுகள் புத்தசாசனத்துக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும் என்று நம்புகிறேன்.

ஆகவே அரசாங்கத்தின் தலையீட்டுடன் விளக்கமறியலில் உள்ள தேரர்கள் உட்பட 10 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பொறுப்புடன் கேட்டுக்கொள்கிறேன்’.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button