News

உழ்ஹிய்யா கடமைகளை சட்டரீதியாக எவ்வித தடைகளும் இல்லாமல் நிறைவேற்றிக்கொள்ள,இனவாத சக்திகளுக்கு அடிபணியாமல் சுற்றுநிருபத்தை வெளியிட்ட அரசிற்கு நன்றி!


– அர்க்கம் முனீர், தலைவர், சமூக நீதிக் கட்சி,
தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினர்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

கடந்த மாதம் அரசாங்கம் ‘மே 27 முதல் ஜூன் 2 முதலான திகதிகளை’  வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தி இருந்தது. இதே வாரத்தில் மே 27 அல்லது மே 28, முஸ்லிம்களின் புனித ஹஜ் பெருநாள் தினம் வர இருக்கிறது. இலங்கையில் மீண்டும் திட்டமிட்ட வகையில் இனவாத அலைகள் எழும்புவதன் பின்னணியில், உழ்ஹிய்யா கடமைகளுக்கு தடங்கல் வரக்கூடும் என்பதனை நாங்கள் உணர்ந்து, ஏப்ரல் 23 ஆம் திகதி ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையினூடாகவும், ஏப்ரல் 26 ஆம் திகதி ஒரு காணொளியின் ஊடாகவும் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டி, அவசரமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருந்தோம்.

குறிப்பாக ஏப்ரல் 28 ஆம் திகதி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்களுக்கு நாங்கள் ஒரு உத்தியோகபூர்வ கடிதமொன்றை அனுப்பி, “பொது நிர்வாகத்தில் ஏற்படும் குழப்ப நிலைகளை தவிர்க்க, மே 30, 31 ஆம் திகதிகளை மட்டும் (முழு வாரத்திற்கும் செல்லுபடி ஆகாத வகையில்) மிருகங்களை மாமிசங்களுக்காக அறுப்பதை தடைசெய்து, வெசாக், உழ்ஹிய்யா குறித்த தெளிவானதொரு சுற்றுநிருபத்தை வெளியிடுமாறு” கோரிக்கை விடுத்திருந்தோம். 

இந்த நிலையில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் குறித்த சுற்றறிக்கை “மே 30,31 மற்றும் ஜூன் 1 ஆகிய திகதியில் மட்டும் இத்தடை செல்லுபடி ஆகும் வகையில்”   இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் பெருநாள் தினங்களாக வரவுள்ள மே 27, 28, 29 ஆம் திகதிகளில் முஸ்லிம்கள் தமது உழ்ஹிய்யா கடமைகளை சட்டரீதியாக எவ்வித தடைகளும் இல்லாமல் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பது உறுதியாகியுள்ளது.

ஆகவே இனவாத சக்திகளின் கோரிக்கைகளுக்கு அடிபணியாமல் தெளிவானதொரு சுற்றறிக்கையை வெளியிட்டு, இரு சமூகங்களும் தமது புனித தினங்களை சுமூகமாக கொண்டாடுவதை உறுதிப்படுத்திய அரசாங்கத்திற்கு, சமூக நீதிக் கட்சி சார்பாகவும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் சார்பாகவும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்த சுற்றறிக்கையானது உள்ளூராட்சி மன்றங்களில் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன்.

அர்க்கம் முனீர்,
தலைவர், சமூக நீதிக் கட்சி,
தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினர்.
08.05.2026.

#socialjusticeparty

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button