தொடரும் சிக்கல்… தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்து பெரும்பான்மை கிடைத்து, ஆளுநரை சந்திக்க விஜய் தரப்பு செல்ல இருக்கும்போது, ஆளுநர் கேரளாவுக்கு பயணம் என தகவல்

தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்குமா இல்லையா என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில் ஆதரவு கிடைத்துள்ளது. 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்தாலும் பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அர்லேகர் இங்கு இருக்கமாட்டார் எனத் தெரிகிறது.
இன்று இரவு தமிழக பொறுப்பு ஆளுநர் கேரளாவுக்கு பயணமாக உள்ளதால் பதவியேற்பு மேலும் தாமதம் ஆகும் என தெரிகிறது.
காங்கிரஸ் ஏற்கனவே 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை விஜய்க்கு அளித்துள்ளது. இதனால் தவெகவின் 107 + 5 + 4 என மொத்தம் 116 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. பெரும்பான்மைக்கு மீதம் தேவைப்படும் 2 எம்எல்ஏக்கள் ஆதரவை பெற விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறது.
விசிகவும் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. விசிக, தவெக ஆட்சியமைக்க பல்வேறு கண்டிஷன்களுடன் ஆதரவு தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமாவளவனை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை பெற்றுள்ளார் ஆதவ் அர்ஜுனா. விசிக அளித்துள்ள கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆதரவு கோர இருக்கிறார்.
முன்னதாக நேற்றைய தினம் விஜய் ஆளுநரிடம் ஆதரவு கடிதம் கொடுத்ததில் சிக்கல் ஏற்பட்டது. அமமுக எம்எல்ஏ பெயரில் தவெக கொடுத்த கடிதம் போலி என சர்ச்சை எழுந்துள்ளது. அதனால் ஆதரவு அளிக்கும் கட்சி குறித்து ஆளுநர் மாளிகை விசாரணை நடத்தி அதன் பின்னர் ஆட்சிக்கு அழைப்பது தொடர்பாக முடிவெடுக்கும் என தெரிகிறது.
இந்த நிலையில், இன்று இரவு 7.10 மணியளவில் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கேரளா செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் அர்லேகர் இன்று இரவு 7.10 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தனது பயணத்தை ரத்து செய்துவிட்டுத்தான் கேரளா செல்லாமல் காத்திருந்தார் ஆளுநர்.
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான அர்லேகர், கேரள மாநிலத்தின் ஆளுநராக உள்ளார். தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், கேரளாவில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநர் அர்லேகர் தற்போது கேரளா செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது – Thats tamil : one india



