28 தொழில் துறைகளுக்கு புதிதாக 5% வரி அறிமுகப்படுத்தவுள்ளோம் …
அரசின் வரி வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், 28 தொழில்துறைகளை உள்ளடக்கியதாக 5% தடுத்துவைக்கப்படும் வரி (Withholding Tax) ஒன்றை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலட்சத்திற்கும் அதிகமான கொடுப்பனவுகளுக்கு வரி
ஒரு தொழில் வல்லுநர் ஏதேனும் ஒரு நிறுவனத்திற்குச் சேவை வழங்கி, ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான கொடுப்பனவைப் பெறுவாராயின், அந்தத் தொகையிலிருந்து 5% தடுத்துவைக்கப்படும் வரி அறவிடப்படும் என்று பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். இது புதிதாக விதிக்கப்படும் ஒரு வரி அல்ல என்றும், முன்கூட்டியே வரியை வசூலிக்கும் ஒரு வழிமுறை என்றும் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் அனைத்து தொழில் வல்லுநர்களையும் வரி முறைமைக்குள் கொண்டு வர எதிர்பார்ப்பதாக மேலும் தெரிவித்தார்.
வரி கோப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் 8 இலட்சமாக இருந்த வரி கோப்புகளின் எண்ணிக்கை, தற்போது 1.3 மில்லியனாக (13 இலட்சமாக) உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். எவ்வாறாயினும், நாட்டில் அதிக வருமானம் ஈட்டும் நபர்கள் 2.3 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் வரி வலையமைப்பிற்குள் கொண்டு வருவதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த காலப்பகுதியில் 1.3 மில்லியன் நபர்களுக்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இந்த TIN சான்றிதழ் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அபேசிங்க தெரிவித்தார். ஏதேனும் ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்ட தடுத்துவைக்கப்படும் வரிப் பணத்தைக் கழிக்கத் தவறினால், அந்த நிறுவனங்களுக்கு எதிராகத் தண்டனை வழங்குவதற்கும் புதிய சட்டங்களின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மறைமுக வரிகளைக் குறைப்பதே நோக்கம்
அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் இதுவரை காணப்பட்ட 80% மறைமுக வரி மற்றும் 20% நேரடி வரி என்ற விகிதாசாரத்தை மாற்றுவதாகும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார். நேரடி வரிகள் மூலம் அரசாங்கத்தின் வருவாயை வலுப்படுத்துவதன் ஊடாக, சாதாரண மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மறைமுக வரிச் சுமையைக் குறைத்து நிவாரணம் வழங்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், வரி செலுத்தாது தவிர்க்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகர்களையும் படிப்படியாக வரி நடைமுறைக்குள் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.



