News

இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் மினாவில் எதிர் கொள்ளும் அசெளகரியங்களுக்கு உடனடி தீர்வு வேண்டும்

இம்முறை இலங்கையில் இருந்து சுமார் 3500 ஹஜ் யாத்திரிகர்கள் புனித மக்கமா நகர் சென்றுள்ளனர்.

நேற்று துல்ஹஜ் 8 ஆவது நாள் “யவ்முத் தர்வியஹ்”  புனித மக்காவில் இருந்து மினா மைதானத்திற்கு புறப்பட்டுச் சென்றார்கள், அங்கு இலங்கை ஹஜ் முகவர்கள் சவூதி அரேபிய ரிஹ்லாத் முதவ்விஃப் ஊடாக  ஒதுக்கிக் கொண்ட கூடாரங்களில் தரித்திருந்தனர்.

என்றாலும் அவர்களில் சுமார் 3000 யாத்திரிகர்களுக்கு 38 குளியலறை வசதிகளே இருந்ததாலும்  அனைத்து யாத்திரிகர்களுக்கும் இரண்டு சாப்பாட்டு புஃபேகள் மாத்திரம் இருந்ததாலும் யாத்திரிகர்கள் பாரிய அசெளகரியங்களை எதிர் கொண்டதாக தெரிய வருகிறது.

உணவிற்காகவும் மலசலகூட வசதிகளுக்காகவும் குளியல் மற்றும் வுழூ செய்து கொள்வதற்காகவும் வரிசைகளில் முண்டியடிக்கும் நிலையில் அமைதியாக தமது வழிபாடுகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடங்கள் சேவைகளை வழங்கிய அல்-பயாத் ஸவூதி முதவ்விஃப் ஊடாக இம்முறை சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனமையால் இறுதி நேரத்தில் அல்-ரிஹ்லாத் முதவ்விஃப் ஊடாக சேவையை பெற்றமையே நெருக்கடிக்கு காரணம் என கூறப்படுகிறது.

இலங்கை யாத்திரிகர்கள் சார்பில் முன்கூட்டியே கட்டனங்கள் செலுத்தப்படடு கடந்த கால ஸவூதி சேவை வழங்குநரை தெரிவு செய்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்து கவலை தெரிவிக்கப் படுகிறது.

எது எப்படிப் போனாலும் இன்று மாலை அரஃபா மைதானத்தில் இருந்து வெளியேறும் யாத்திரிகர்கள் இன்றிரவு முஸ்தலிஃபா மைதானத்தில் இடைத்தங்கலாக தரித்திருந்து நாளை யவ்முன் நஹ்ர்  (ஈதுல் அழ்ஹா) தினத்தில் மீண்டும் மினா மைதானத்தில் தமது கூடாரங்களுக்கு வருகை தரவுள்ளனர்.

அங்கு அவர்கள் ஜம்ரதுல் அகபா வில் ஷைதானுக்கு கல் எறிதல், இஹ்ராம் களைதல், ஹத்யு குர்பானி நிறைவேற்றுதல், தவாபுல் இபாழாவிற்காக மக்கா சென்று திரும்புதல் என பல கிரியைகளை தொடராக செய்ய இருக்கும் நிலையில் பொது வசதிகள் இவாவாறான நிலையில் இருந்தால் அதிகம் சிரமப்படுவார்கள்.

அத்தோடு அவர்கள் தொடர்ந்து ஐயாமுத் தஷ்ரீக் மூன்று நாட்கள் கூடாரங்களில் முகாமிட்டிருக்க வேண்டிய கட்டாயமும் இருப்பதனால்  இலங்கை தூதுவராலயம்  கொன்ஸல் ஜெனரல் காரியாலயம்  ஆகியவை ஸவூதி அதிகாரிகளோடு உடனடியாக தொடர்பு கொண்டு துரித நடவடிக்கைகளை மேற் கொள்ளல் வேண்டும்.

கூடாரங்களை ஒதுக்கித் தருவது ஹஜ் முகவர்கள் பொறுப்பு, பொதுவசதிகள் ஸவூதி ஹஜ் அமைச்சின் பொறுப்பு என்று  கூறப்பட்டாலும் சகல யாத்திரிகர்களும் ஸவூதி முதவ்விஃப்களுக்கு உரிய கட்டனங்களை செலுத்தி முன்பதிவுகளை செய்துள்ளமையால் அவர்களது உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.

இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுடைய நலன்களை கவனிக்கவென அனர்களிடம்  இருந்து வசூலிக்கப்பட்ட ஹஜ் நிதியத்தில் இருந்து செலவு செய்யப்பட்டு  ஒரு பிரதி அமைச்சருடன் ஹஜ் குழுவினர்  சிலரும் அங்கு சென்றிருக்கும் நிலையில் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்புகிறோம், எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதனை அறிந்து கொள்வதில் இலங்கையில் உள்ள ஹஜ் யாத்திரிகர்களின் உறவினர்கள் ஆவலாய் உள்ளனர்.

தவறும் பட்சத்தில் தறிழைத்தவர்கள் எந்தத் தரப்பாக இருப்பினும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட சகல ஹஜ் யாத்திரிகர்களுக்கும் இழப்பீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

இலங்கை வெளிவிவகார அமைச்சு நாளை ஸவூதி அரேபிய தூதுவரை அழைத்து மேற்படி விடயம் குறித்து துரிதமான நடவடிக்கைகள் எடுப்பதற்கான வேண்டுகோளை விடுத்தால் சாலச் சிறந்த நகர்வாக இருக்கும்.

*மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்*
முன்னாள் கொன்ஸல் ஜெனரல்
ஜித்தா- ஸவூதி அரேபியா (2005-2007)
முன்னாள் பொதுச் செயலாளர்- தேசிய ஷூரா சபை
முன்னாள் முஸ்லிம் சமய கலாசார விவகார அமைச்சரின் பிரத்தியேக கெளரவ ஆலோசகர். (2002-2005)
✍️ 27.06.2026 || SHARE

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button