News

பௌத்த தர்மம் ஒட்டுமொத்த உலகிற்கும் நடைமுறைக்குரியதும், எக்காலத்திற்கும் பொருத்தமானதுமான அமைதிச் செய்தியைக் கொண்டு வந்த மிகச்சிறந்த தத்துவப் போதனையாகும்.

அகிம்சை, கருணை மற்றும் அனைத்து உயிரினங்கள் மீதான எல்லையற்ற மைத்திரி (அன்பு) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சம்புத்த தர்மத்தின் விழுமியங்களை நமது வாழ்க்கையில் மேலும் இணைத்துக் கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் தனது வෙසாக் தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது:

சம்புத்த தெமகுல (முப்பெரும் விழா) நினைவுகூரப்படும் வெசக் பண்டிகை, உலகம் முழுவதும் வாழும் பௌத்த மக்களின் மிக உன்னதமான திருவிழாவாகும். பௌத்த பாரம்பரியங்களால் வளப்படுத்தப்பட்ட பெருமைமிக்க கலாசாரத்தைக் கொண்ட இலங்கை மக்கள், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுடன் இணைந்து இந்த உன்னத முப்பெரும் விழாவை பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.

பௌத்த தர்மம் என்பது ஒட்டுமொத்த உலகிற்கும் நடைமுறைக்குரியதும், எக்காலத்திற்கும் பொருத்தமானதுமான அமைதிச் செய்தியைக் கொண்டு வந்த மிகச்சிறந்த தத்துவப் போதனையாகும். கௌதம புத்த பெருமானால் தேசனை செய்யப்பட்ட ஒட்டுமொத்த தர்மமும் மைத்திரி (அன்பு), கருணை, முதிதா (மகிழ்ச்சி) மற்றும் உபெக்ஷா (நடுநிலைமை) ஆகிய சதிர் பிரம்ம விஹாரங்களை (நான்கு உன்னத குணங்களை) அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அமைதி, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் குறித்த முன்மாதிரியான பாடம் புத்த பெருமான் உட்பட அனைத்து சமயத் தலைவர்களும் போதித்த தர்மமாகும். வெளி உலகில் அமைதியை ஏற்படுத்துவதற்கு, முதற்கண் தனிமனிதனின் உள்மன ஆன்மீக அமைதி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை பௌத்த தர்மம் சுட்டிக்காட்டுகிறது. பொதுவான நல்ல நோக்கங்களுக்காக சமூகத்தை அணிதிரட்டுவதற்கு, பௌத்த தர்மம் காட்டும் இந்த உள்மன அமைதியான அணுகுமுறை, வேறு எக்காலத்தையும் விட இன்று மிகவும் பொருத்தமானது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அண்மையில் இந்நாட்டில் பாதயாத்திரை மேற்கொண்ட வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பஞ்ஞாகர தேரர் அவர்களும் இலங்கைக்கு கொண்டு வந்தது இதே செய்தியைத் தான் என்று நான் நம்புகிறேன்.

மேலும், வெசக் கொண்டாட்டம் என்பது ஒரு மத விழா மட்டுமல்லாது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கை மக்களின் தனித்துவம், கூட்டுப்பண்பு மற்றும் கலைத்துவமிக்க ஆக்கத்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த கலாசார விழாவாகவும் அமைகிறது. வெசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ‘பிரதிசம்பதா பூஜை’களுக்கு (கொள்கை வழிபாடுகளுக்கு) முன்னுரிமை அளித்து ஏற்பாடு செய்யப்படும் தானம், சீலம், தியானம், தர்ம தேசனை நிகழ்ச்சிகளும், ‘ஆமிச பூஜை’களுக்கு (பொருள் வழிபாடுகளுக்கு) முன்னுரிமை அளித்து ஏற்பாடு செய்யப்படும் அண்ணதானங்கள் (தன்சல்), பௌத்த பக்திப் பாடல்கள், அழகான கூடுகள், எழில்மிகு தோரணங்கள் மற்றும் அலங்காரங்கள் போன்றன பௌத்தர்கள் மட்டுமன்றி, அனைத்து மதங்களைச் சேர்ந்த இலங்கை மக்களின் ஒற்றுமையுடன் வண்ணமயமாகின்றன. இதன்படி, அனைத்து இனங்களுக்கும் இடையே பரஸ்பர புரிதல், ஒற்றுமை மற்றும் சகவாழ்வை வளர்க்கும் வெசக் கொண்டாட்டமானது நல்லிணக்கத்தின் சின்னம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அகிம்சை, கருணை மற்றும் அனைத்து உயிரினங்கள் மீதான எல்லையற்ற மைத்திரி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சம்புத்த தர்மத்தின் விழுமியங்களை நமது வாழ்க்கையில் மேலும் இணைத்துக் கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்து, தர்மத்தின் குளிர்ச்சியால் அனைவரினதும் மனங்களும் அமைதியடையும் ஆசிபெற்ற வெசக் திருவிழாவாக அமைய வாழ்த்துகிறேன்.

Recent Articles

Back to top button