
உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு மற்றும் சர்வதேச ரீதியிலான சவால்களின் காரணமாகவே உள்நாட்டில் தற்காலிகமாக எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், ஒரு நாட்டை ஆட்சி செய்யும்போது இயற்கை பேரிடர்கள், பொருளாதார வீழ்ச்சிகள் மற்றும் கடந்த கால ஆட்சியாளர்களின் தவறான முடிவுகள் போன்ற உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, 2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின்போது, ஆட்சியாளர்களின் முறையற்ற நிர்வாகத்தால் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளானதை நினைவு கூர்ந்த அவர், தற்போதைய அரசு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பில்லியன் கணக்கில் இழப்பீடுகளை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தற்போது உள்நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை மாற்றமானது உள்நாட்டு நிர்வாகத் தவறு அல்ல, மாறாக அது முற்றிலும் சர்வதேச காரணிகளால் உருவானது என்று அவர் வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்ட ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் உலக அளவில் எண்ணெய் விலையுயர்வுக்கு வழிவகுத்துள்ளன.
இந்த சர்வதேச யுத்த சூழலானது இலங்கை போன்ற நாடுகளை மட்டுமன்றி இந்தியா, வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் போன்ற வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளையும் கூட பாதித்துள்ளது.
உலகப் பொருளாதாரத்தில் பெரும் பங்கைக் கொண்ட இந்தியாவே கடந்த சில வாரங்களில் நான்கு முறை எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதுடன், இந்திய ரூபாயின் மதிப்பிலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
காப்புறுதி கட்டணங்களின் உயர்வு மற்றும் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணிகளால், அரசாங்கத்திற்கு கட்டுப்படுத்த முடியாத எல்லைக்கு அப்பால் இந்த விலை அதிகரிப்பு சென்றுள்ளதாகவும், இதனாலேயே நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய நேரிட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.
விலை அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும், அரசாங்கம் இன்னும் மக்களுக்கு பெருமளவு மானியங்களை வழங்கி வருவதாக அசித நிரோஷன தெரிவித்தார்.
அதன்படி, டீசல் லீற்றர் ஒன்றுக்கு 100 ரூபாயும், பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு 10 ரூபாயும் அரசாங்கம் நட்டத்தைத் தாங்கி மானியமாக வழங்கி வருகிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் 5ஆம் கட்ட தவணையாக 695 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஏற்றுமதி வருவாயை அதிகரித்தல், அரச வருமானத்தை உயர்த்துதல் மற்றும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் ஸ்திரப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
எனவே, பொதுமக்கள் இந்த தற்காலிக விலை மாற்றங்கள் குறித்து அச்சமடையத் தேவையில்லை எனக் கேட்டுக்கொண்ட அவர், சர்வதேச சூழல் வழமைக்குத் திரும்பியவுடன் மக்களுக்கு சாதகமான விலையில் எரிபொருளை வழங்க அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.
(ஞான பிரசாந்தன்)



