“எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும்” – அரசாங்கத்திடம் ஐஓசி, சினோபெக் மற்றும் ஆர்.எம். பார்க் நிறுவனங்கள் கோரிக்கை
இலங்கையின் எரிபொருள் சந்தையில் ஈடுபட்டுள்ள லங்கா ஐஓசி (Lanka IOC), சினோபெக் (Sinopec) மற்றும் ஆர்.எம். பார்க் (RM Parks) ஆகிய எரிபொருள் நிறுவனங்கள், எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய விலைகளின் கீழ் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும், அந்த நஷ்டத்தை மேலும் தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனினும், தனியார் நிறுவனங்கள் விடுத்துள்ள இந்த கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு உறுதியான பதிலையும் வழங்கவில்லை என்பதுடன், தீர்மானம் எடுப்பதை மேலும் தாமதப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக்க, எரிபொருள் செயல்பாட்டு நஷ்டத்தை மேலும் தாங்க முடியாது என்பதால், விலை திருத்தம் அவசியம் என்ற கோரிக்கை அந்த நிறுவனங்களிடமிருந்து அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.



