வீட்டில் யாரும் யாரும் இல்லாத நேரத்தில் நுழைந்து ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பியோடிய 16 மற்றும் 19 வயதுடையா இருவர் கைது – புதைத்து வைக்கப்பட்டிருந்த 74 இலட்சம் ரூபா பணமும் மீட்பு

கடந்த மே மாதம் 27ஆம் திகதி பகல் வேளையில், கொம்மாந்துறை பகுதியிலுள்ள வீடொன்றில் குடியிருப்பாளர்கள் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை நோட்டமிட்ட கொள்ளைக் கும்பல், வீட்டின் புகைக்கூட்டை (Chimney) உடைத்து உள்ளே நுழைந்துள்ளது. பின்னர், வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பியோடியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர். விபத்து நடந்த வீட்டின் சுற்றுவட்டாரத்திலுள்ள கண்காணிப்புப் பொறிமுறைகளை (CCTV) ஆராய்ந்த பொலிஸார், அதில் பதிவாகியிருந்த சந்தேகநபர்களின் நடமாட்டங்களை வைத்து அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அதிரடித் தேடுதல் வேட்டையில், கெருடாவில் பகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவனும்19 வயதுடைய இளைஞனும் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் கைது செய்யப்பட்டனர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன:
வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், அங்குப் பெருமளவிலான பணம் இருப்பதைக் கண்டதும், உடனடியாக நெடுங்கேணி பகுதியிலிருந்த மூன்றாவது நபருக்கு ‘வாட்ஸ்அப் வீடியோ கால்’ (Video Call) மூலம் பணத்தைக் காட்டியுள்ளனர். அதைப் பார்த்த அந்த நபர், “அங்கிருக்கும் முழுப் பணத்தையும் எடுத்துக் கொண்டு உடனடியாக வாருங்கள்” என உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, கொள்ளையடிக்கப்பட்ட முழுப் பணமும் நெடுங்கேணிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள ஒரு காணியில் இரகசியமாகப் புதைத்து வைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கொடுத்த தகவலின் பேரில், அக்காணியைத் தோண்டிய பொலிஸார், புதைத்து வைக்கப்பட்டிருந்த பணத்தில் இருந்து 74 இலட்சம் ரூபாயை பத்திரமாக மீட்டுள்ளனர்.
நெடுங்கேணியைச் சேர்ந்த கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான (மூன்றாவது நபர்) சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் அங்கு சென்றபோது, அவர் ஏற்கனவே தலைமறைவாகியிருந்தமை தெரியவந்துள்ளது. அவரைப் பிடிப்பதற்காக வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 16 வயதுச் சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் ஆகிய இருவரையும் நீதிமன்ற அனுமதியுடன் தடுப்புக் காவலில் (Detention) வைத்து, எஞ்சிய பணத்தை மீட்பதற்கான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.



