News

🕋
ஹஜ் யாத்திரிகர்கள் எதிர்கொள்ளும் தொடர் அவலங்கள்: தீர்வு வேண்டும்!

இம்முறை இலங்கையில் இருந்து சென்ற 3500 ஹஜ் யாத்திரிகர்கள் மினா வெளியில் தங்கியிருந்து ஹஜ்ஜின் பிரதான கிரியைகளை செய்கின்ற பொழுது அவர்களுக்கு தரப்பட்ட 35 குளியலறை/கழிவறைகள் மற்றும் இரண்டு உணவு புஃபேக்கள் காரணமாக பாரிய அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்ததனை அறிவோம்.

வழமையாக பல ஸவூதி அரேபிய முஅல்லிம் நிறுவனங்களூடாக இலங்கை முகவர்கள் கட்டன ஏற்றத் தாழ்வுகளுடன் போட்டி அடிப்படையில் சேவைகளை பெற்று வந்த முறை இம்முறை தடுக்கப்பட்டு தாம் சிபாரிசு செய்யும் ஒரே ஸவூதி முஅல்லிம் ஊடாக சேவைகளை ஒரே இடத்தில் பெற வேண்டும் என இலங்கை ஹஜ் கமிட்டி வலியுறுத்தியமையே இந்த அவல நிலைக்கான பிரதான காரணம் என இலங்கை ஹஜ் முகவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

என்றாலும் ஸவூதி அரேபிய அரசு ஹஜ் சேவைகள் பொது வசதிகளை மேம்பாடு செய்யும் நோக்கில் ஒரு ஹஜ் முடிந்தவுடனேயே அடுத்த ஹஜ்ஜிற்கான ஏற்பாடுகளை செய்வதனால் முன்கூட்டியே கோட்டா ஒதுக்கீடுகளை அறிந்து பதிவுகளை மேற்கொள்வதில் இலங்கையர் நாம் தாமதமாவதால் இறுதிக்கட்ட இழுபறிக்குள் சிக்கிவிடுவதாகவும் அந்த நிலைக்கு பல தரப்புகளும் காரணமாக இருப்பதாகவும் தெரிவிக்கப் படுகிறது.

என்றாலும், இம்முறை அல்-ரிஹ்லத் எனும் புதியதொரு ஸவூதி முஅல்லிம் நிறுவனத்தை தெரிவு செய்த ஹஜ் கமிட்டி முதற்தர “ஏ” குரூப் சேவைகளை  “பீ” குரூப் கட்ணத்தில் பெற்றுத்தர உடன்பட்டு அங்கு சென்ற போதும் படுக்கையறை மற்றும் சில வசதிகள் தவிர்த்து உணவு, குளியல், மற்றும் கழிவறை வசதிகள் விடயத்தில் தவறிழைத்து விட்டதால் அவர்களுக்கு ஏதிராக முறைப்பாடு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு ஹஜ் யாத்திரிகரும் சுமார் 21 இலட்சம் முதல் 30, 40 இலட்சங்கள் என கட்டணங்களை செலுத்தி சென்ற போதும் ஒரே ஸவூதி முஅல்லிம் முகவருடன் சகலரும் ஒரே இடத்தில் ஒரே மாதிரியான சேவைகளையும் அசெளகரியங்களை அனுபவிக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டதால் ஒருவரை விட மற்றவர் கட்டண வேறுபாடுகளுக்கு ஏற்ப சேவைகளை வழங்க முடியாது போனதால் அவர்களும் யாத்திரிகர்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஹஜ் என்றால் அர்ப்பணம் தியாகம் பொறுமை சகிப்புத் தன்மை என யாத்திரிகர்களை ஆசுவாசப்படுத்த வழிகாட்டிகள் முனைந்தாலும் ஹஜ்ஜாஜிகள் தமது பிரதான கிரியைகளை காலநேரத்திற்கு சரிவரச் செய்து கொள்ளும் ஏற்பாடுகளுக்காக கட்டணம் செலுத்தி இருப்பதனால் தமது உரிமைகள் விடயத்தில் கேள்வி எழுப்பக் கூடாது என அவர்களை வலியுறுத்துவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயமாகும்.

எனவே, இம்முறை ஹஜ் யாத்திரிகையின் போது இடம் பெற்ற குளறுபடிகள் குறித்து சுயாதீனமான ஒரு விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஹஜ் யாத்திரிகர்களுக்கான நீதி பெற்றுக் கொடூட்கப்படுவதோடு அடுத்தடுத்த வருடங்களில் அத்தகைய குளறுபடிகள் ஏற்படாது தவிர்ப்பதற்கான சிபாரிசுகளை முன்வைத்தல் வேண்டும்.

2002- 2004 காலப்பகுதியில் இலங்கை ஹஜ் விவகாரங்களில் அன்றைய அமைச்சரின் கெளரவ ஆலோசகராகவும் பின்னர் 2005- 2007 காலப்பகுதியில் ஜித்தாவில் இலங்கை கொன்ஸல் ஜெனரலாக இருந்து சேவைகளை வழங்கிய அனுபவத்திலும் ஒரு சில ஆலோசனைகளை கூற விரும்புகிறேன்.

இலங்கை ஹஜ் விவகாரங்கள் முற்றிலும் தனியார் துறை முகவர்களால் மேற்கொள்ளப்படுவதால் அடிப்படையான சில ஒருங்கிணைப்புகள் கட்டனங்கள் சார் கட்டுக் கோப்புகள் தவிர்த்து சர்வதேச சுற்றுலா மற்றும் பயண தராதரங்களுக்கும் ஸவூதி அரேபிய சட்ட திட்டங்களிற்கும் ஏற்ப போட்டித் தன்மையில் ஹஜ் முகவர்கள் சேவைகளை வழங்க அனுமதிக்க வேண்டும்.

அவ்வாறு ஹஜ் உம்ரா முகவர்களை பதியும் பொழுது அவர்கள் இலங்கை சிவில் விமான போக்குவரத்து பதிவுகளை பெற்றவர்களா, அந்த நியமங்களுக்கு ஏற்ப காரியாலய வசதிகளை, ஈ.பீ.எஃப், ஈ.டீ.எஃப் கட்டி ஊழியர்களை வைத்துள்ளார்களா, அவர்கள் வழங்கும் காப்புறுதிகள் போன்ற அடிப்படை விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

கடந்த பல தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கை ஹஜ் கமிட்டி மேற் கொண்ட சில ஏற்பாடுகளை தற்போது ஸவூதி அரசும் பயண முகவர்களும் ஸவூதி முஅல்லிம் நிறுவனங்களும் வழங்குவதால் ஹஜ் நிதியம் என்ற பெயரில் முகவர்களிடமும் யாத்திரிகர்களிடமும் நிதி சேகரித்து இலங்கையில் இருந்து ஹஜ் கமிட்டி மற்றும் மருத்துவக் குழு பாரிய செலவில் அங்கு செல்வதனை தவிர்த்தல் வேண்டும்.

முஸ்லிம் விவகார திணைக்கள பிரதிநிதிகள் இருவர் மற்றும் ஸவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம், மற்றும் கொன்ஸல் ஜெனரல் காரியாலய, இலங்கை இல்ல அதிகாரிகள், ஹஜ் முகவர் சங்க பிரதிநிதிகளுடன் மக்காவில் உள்ள தொண்டர்கள் ஹஜ் விவகாரங்களை தாராளமாக அங்கு கவனிக்கவும் மேற்பார்வை செய்யவும் முடியும்.

ஹஜ் முகவரை பதிவு செய்ய வருடா வருடம் இரண்டு இலட்சம் யாத்திரிகர்களிடம் தலா 6000 என அறவிட்டால் சுமார் வருடா வருடம் ஐந்து கோடி ரூபாய்கள் சேகரிக்கப்படுகிறது, இது சுற்றி வளைத்து ஹஜ் யாத்திரிகர்களிடமிருந்தே வசூலாகிறது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே சொல்லப்பட்ட அரச, ஸவூதி மற்றும் சர்வதேச பதிவு நியமங்களுக்கு மாத்திரமாக சுமார் 50,000 கட்டணம் அறவிட்டு உம்ரா பயண முகவர்களுக்கான அனுமதி சுமார் 250  வழங்கப்பட்டால் அங்கும் சுமார் ஒரு கோடிக்கு மேல் நிதி வசூலாகிறது, ஆனால் பெரும்பாலான உம்ரா முகவர்கள் ஹஜ் யாத்திரைக்கான இடைத்தரகர்களாக மாறுவதால் அல்லது சுயாதீனமான இடைத்தரகர்கள் செயல்படுவதால் அவர்களும் கமிஷன் பெறவும் வருடா வருடம் ஹஜ் செய்யவும் அப்பாவி யாத்திரிகர்களது கட்டணங்களே அதிகரிக்கப்படுகின்றன.

இவ்வாறான முறைகேடுகளை நிறுத்த முடியாத அரசியல் நியமன ஹஜ்கமிட்டிகளால் ஆனது எதுவுமில்லை மாறாக ஹஜ் யாத்திரிகர்களுக்கு அவர்கள் சுமையாகவே மாறுகின்றனர் என்பது வெளிபாபடையாக பேசப்படாத உண்மையாகும்.

ஏற்கனவே சொல்லப்பட்ட கண்டிப்பான நிபந்தனைகளுடன் பதிவு செய்யப்பட்ட சகல தராதரங்களையும் கொண்ட யாத்திரிகர்கள் சார்பில் காப்புறுதிகளை வழங்க முடியுமான ஹஜ் முகவர்களுடன் நேரடியாக முன் கூட்டியே பதிவுகளை மேற் கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

இம்முறை ஹஜ் யாத்திரிரை நிறைவுற்று நாடு திரும்பிய உடனேயே யம் முகவர்கள் சங்கங்கள் ஒன்று கூடி மேற்படி விடயங்களை ஆராய்ந்து  இலங்கை சமய கலாசார அமைச்சிற்கு தமது சிபாரிசுகளை முன்வைத்தல்  வேண்டும்.

அதே போன்று இலங்கை ஹஜ் கமிட்டி இங்கும் அங்கும் செய்கின்ற பணிகள் மற்றும் மக்காவில் உள்ள இலங்கை இல்லம் வழங்கும் சேவைகளை, வரவு செலவு விபரங்களை இலங்கை முஸ்லிம் விவகார திணைக்களமும் ஸவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகமும் கொன்ஸல் ஜெனரல் காரியாலயமும்  மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தல் காலம் கடந்து போன கட்டாயமாகும்!

*மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 03.06.2026

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button