2.5 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் ஹேக்கர்களால் திருடப்பட்டது எப்படி? CID இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

மத்திய வங்கியின் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் கடனைத் திருப்பிச் செலுத்தும் போது, அசல் ஒப்பந்தத்தை சரிபார்க்காமலும் மேலதிக விளக்கங்களைப் பெறாமலும், மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட ஒரு விலைப்பட்டியலின் (invoice) அடிப்படையில் திறைசேரி அதிகாரிகள் அதனைச் செலுத்தியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
திறைசேரி ஊடாக கடனைத் திருப்பிச் செலுத்தும் போது, இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை, ஹேக்கர்களால் (hacker) கட்டுப்படுத்தப்படும் என சந்தேகிக்கப்படும் கணக்கொன்றிற்கு மாற்றப்பட்ட சர்ச்சைக்கிரிய விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போதே இந்த வெளிப்படுத்தல் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அதிகாரிகள், மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட விலைப்பட்டியலின் அடிப்படையில் செயற்பட்டுள்ளதாகவும், அசல் கடன் ஒப்பந்தம் தொடர்பான மேலதிக சோதனைகளை நடத்தாமல் இந்த கொடுப்பனவை மேற்கொண்டுள்ளதாகவும் சிஐடி அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
மேலும், கொடுப்பனவு செயல்முறைக்காக பயன்படுத்தப்பட்ட இணைய சேவையக அமைப்பிலிருந்து (internet server system) தரவுகள் பிரதியெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருப்பதாக புலனாய்வாளர்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்ட நான்கு குறுந்தகடுகள் (CDs) பகுப்பாய்வு மற்றும் அறிக்கைக்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்படவுள்ளன.
தொடர்புடைய தடயவியல் பரிசோதனை உத்தரவுகளுக்கான சிஐடியின் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த விசாரணை தொடர்பாக 42 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிஐடி அதிகாரிகள் வெளிப்படுத்தினர்.
வேலைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரண பரிசோதனை அறிக்கையின் பிரதியும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் ஜூலை 8ஆம் திகதி, விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் சிஐடிக்கு உத்தரவிட்டார்.
அடுத்த விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களமும் முன்னிலையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



