News

ஒரு சில பிக்குகளின் தவறுகளை முன்வைத்து, முழு பிக்கு சமூகத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிடும் நபர்கள் மீது அரசாங்கம் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது?

(க.சிவலிங்கமூர்த்தி)

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதும் அதனைப் போஷிப்பதும் அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பாகுமென சிங்கள ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கள ராவய அமைப்பின் காரியாலயத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சமூக ஊடகங்களில் அண்மைக்காலமாக மத எதிர்ப்பு கருத்துகளை முன்வைக்கும் குழுக்கள் மிகத் திட்டமிட்ட வகையில் செயற்பட்டு வருகின்றன. பல அரசியல் கட்சிகளின் கொள்கைகளில் மதமற்ற தன்மை பகிரங்கமாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பௌத்த சாசனத்தை வீழ்த்தும் நோக்கில் சூட்சுமமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மகா சங்கத்தினரிடையே ஏற்படும் சிறு விடயங்களைக் கூடப் பெரிதுபடுத்தி, முழு பிக்கு சமூகத்தையும் அவமதிக்கும் வகையிலும், சாசனத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் இவர்கள் செயற்படுகின்றனர்.

புத்த பெருமானின் காலத்தில்கூட, சாசனத்தின் ஒழுக்கத்தை நிலைநாட்ட விநய விதிகள் பிறப்பிக்கப்பட்டன. ஆரம்பத்தில் சாசனத்துக்கு வந்தவர்கள் துறவறத்தின் மேன்மையை உணர்ந்து வந்தனர். பின்னர் வந்த காலங்களில் பல்வேறு சமூக மற்றும் குடும்ப நெருக்கடிகளுக்கு உள்ளானவர்கள் பாதுகாப்பைத் தேடி சாசனத்துக்குள் வந்தனர்.

இத்தகைய சூழலில்தான் புத்த பெருமான் சாசனத்தின் பாதுகாப்புக்காக ஒழுக்க  விதிகளை வகுத்தார். வரலாற்று உண்மைகளைச் சரிவர அறியாத, பௌத்த தர்மம் குறித்து எவ்வித புரிதலும் இல்லாத நபர்கள், இன்று பிக்கு சமூகத்தை விமர்சிப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

நான் சிறு வயதிலேயே புத்த பெருமானின் கருணை மீதான ஈர்ப்பினாலும், மதிப்பினாலும் துறவறத்தை மேற்கொண்டேன். சாசனத்துக்குள் நுழையும் சிறுவர்களுக்கே ஒழுக்கநெறிகள் மற்றும் சீலங்கள் முறையாகக் கற்பிக்கப்படுகின்றன.

இவ்வாறான நிலையில், ஒரு சில பிக்குகளின் தவறுகளை முன்வைத்து, முழு பிக்கு சமூகத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் செயற்படும் நபர்கள் மீது அரசாங்கம் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது?

பல்லேகம தேரர் தொடர்பான சம்பவம் விவகாரத்தில், அவர் மீதான சட்ட நடவடிக்கைகள் சட்டப்படி முன்னெடுக்கப்படுகின்றன. அதில் எமக்கு மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால், அந்தச் சம்பவத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, சமூக ஊடகப் பக்கங்களின் ஊடாக ஒட்டுமொத்த பிக்கு சமூகத்தையும் இழிவுபடுத்துபவர்கள் மீது அரசு ஏன் மௌனம் காக்கிறது?

இவ்வாறான நபர்கள் வெளிநாடுகளில் இருந்து அல்லது பிற மதக் குழுக்களில் இருந்து நிதி பெற்றுக்கொண்டு பௌத்த சாசனத்தை அழிக்க முற்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. பௌத்த பிக்குகளுக்கும் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். எனவே, நாடு பெரும் குழப்பத்துக்கு உள்ளாகும் வரை காத்திருக்காமல், இவ்வாறான சமூக ஊடகப் பக்கங்களைச் சட்டரீதியாகக் கட்டுப்படுத்துமாறும், பிக்கு சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அரசாங்கத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றேன் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button