“இலங்கை ஹாஜிகளுக்கு மினாவில் எந்தப் பிரச்சினையுமில்லை”

-பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்-
புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றச் சென்ற இலங்கை ஹாஜிகளுக்கு மினாவில் எந்தப் பிரச்சினையும் இம்முறை ஏற்படவில்லை என சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்துள்ளார்.
புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன் தினம் (09) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியவற்றின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மினாவில் இலங்கை ஹாஜிகள் எதிர்நோக்கிய விடயம் தொடர்பில் பேசியுள்ளனர்.
இதற்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் முனீர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பிரதி அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“மினாவில் இலங்கை ஹாஜிகளுக்கு ஒவ்வொரு வருடமும் இவ்வாறான சில பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் இந்த வருடம் மினா கூடாராத்திற்கு வெளியில் இலங்கை ஹாஜிகளுக்கு மலசலகூட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
எனினும், தூரம் என்பதால் இலங்கை ஹாஜிகள் குறித்த மலசலகூடங்களை பாவிக்கவில்லை. இலங்கை ஹாஜிகளுக்கு மினாவில் அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை இந்தக் கூட்டத்தில் தெரிவித்தமை பொய்யான விடயம்” என்றார் பிரதி அமைச்சர் முனீர்.
இதனையடுத்து பிரதி அமைச்சர் முனீர் முழப்பரிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பிரதி அமைச்சர் முனீர் முழப்பரின் கருத்தினை பெறுவதற்காக இன்று (11) வியாழக்கிழமை காலை தொலைபேசி மூலம் தொடர்புகொள்வதற்கு பலமுறை முயற்சித்த போதிலும் அது பயனளிக்கவில்லை.
இதேவேளை, கண்டி மாவட்ட ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷெரீப், இந்த வருடம் ஹஜ் கடமைக்காக சென்ற இலங்கை ஹாஜிகள் மினாவில் அடிப்படை வசதிகள் வழங்கப்படாதது விடயமாக தன்னிடம் பலர் முறைப்பாடு செய்ததாக இந்த கூட்டத்தில் தெரிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.



