“நாங்கள் வரும்போதே கடன் வாங்குவோம் என்று கூறினோம்.. கடன் வாங்குவது ஒரு பிரச்சினையல்ல..”
எந்தவொரு அரசாங்கமும் நாட்டை நடத்துவதற்கு கடன் வாங்க நேரிடும் எனவும், கடன் வாங்குவது ஒரு பிரச்சினையல்ல எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே, தங்களது ஆட்சியின் கீழும் கடன் வாங்க நேரிடும் என்பதை பகிரங்கமாக அறிவித்திருந்ததாக அமைச்சர் வலியுறுத்தினார்.
“கடன் வாங்குவது என்பது ஒரு பிரச்சினையல்ல. நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கூறியிருந்தோம், நாங்கள் வந்தாலும் கடன் வாங்குவோம் என்று,” என அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.
இவற்றுக்கு மேலதிகமாக, எதிர்க்கட்சிகளினால் சுமத்தப்படும் அரசியல் பழிவாங்கல்கள் குறித்த குற்றச்சாட்டுகளையும் அமைச்சர் இங்கு நிராகரித்தார்.
அரசாங்கத்திற்கு பழிவாங்கும் தேவை இருந்திருந்தால், அதனை அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே செய்திருக்க முடியும் எனவும், தற்போது இடம்பெற்று வருவது சுமார் ஒன்றரை வருட காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் முறையான நீதிமன்றச் செயல்முறையாகும் எனவும் அவர் கூறினார்.
யாராவது ஒருவர் சிறையிலடைக்கப்படுகிறார் என்றால், அது முறையான நீதிமன்ற வழிமுறையின் மூலமே நடக்குமே தவிர, அரசியல் பழிவாங்கலால் அல்ல என்றும் அமைச்சர் சுனில் குமார கமகே வலியுறுத்தினார்.



