காரைதீவு பிரதேச சபையின் 12வது மாதாந்த சபைக் கூட்டத்தில் அனல் பறந்த விவாதம் : பள்ளிவாசல் காணி வழக்கு தொடர்பான பிரேரணையால் சபையில் பதற்றம் – வாக்கெடுப்பை புறக்கணித்து முஸ்லிம் உறுப்பினர்கள் வெளிநடப்பு

நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேச சபையின் 04வது சபையின் 12வது மாதாந்த சபைக் கூட்டம் இன்று (16) காலை தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் பிரதேச சபை அலுவலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. ஆரம்பத்தில் வழமையான நிர்வாக நிகழ்வுகளுடன் அமைதியாகத் தொடங்கிய கூட்டம், பின்னர் பல்வேறு அபிவிருத்தி மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பாக உறுப்பினர்கள் மத்தியில் காரசாரமான விவாதங்களுக்கு வழிவகுத்ததோடு, குறிப்பாக நீண்டகாலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பள்ளிவாசல் காணி வழக்கு தொடர்பான பிரேரணை சபையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், கடந்த அமர்வின் கூட்டறிக்கையும் ஏகமனதாக உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சபைக்கு அறிவிக்கப்பட வேண்டிய விடயங்களின் கீழ், 2026ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட டித்வா வேலைத்திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ள காரைதீவு–07 பகுதியில் அமைந்துள்ள திருமால்முக வீதியை அபிவிருத்தி செய்வதற்கான கேள்விக்கோரல் நடவடிக்கைகள் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டவுடன் சபையில் எதிர்பாராத வகையில் கடும் விவாதம் உருவானது. உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில் மற்றும் உறுப்பினர்களான ஏ.எம். ஜாஹீர், எம்.என்.எம். ரணீஸ் உள்ளிட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் எழுந்து கருத்துத் தெரிவிக்கையில், அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிட்டு முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளை புறக்கணிக்கும் வகையில் அமுல்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டினர்.
குறிப்பாக, சபையின் எல்லைக்குட்பட்ட பல முஸ்லிம் கிராமங்களில் அடிப்படை வீதி மற்றும் உட்கட்டமைப்பு தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாத நிலையில், மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட பகுதிகளுக்கே திட்டங்கள் ஒதுக்கப்படுவது சமநிலையற்ற அணுகுமுறையாகும் என அவர்கள் வாதிட்டனர். இதற்கு பதிலளித்த தவிசாளர் உள்ளிட்ட சில உறுப்பினர்கள், திட்ட ஒதுக்கீடுகள் தொழில்நுட்ப மதிப்பீடுகள் மற்றும் அரச நிறுவனங்களின் அனுமதிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளித்தனர்.
இதனைத் தொடர்ந்து தவிசாளரின் பிரேரணைகள் ஒன்றன்பின் ஒன்றாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 2010, 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்கான மீளளிக்கப்படாத முத்திரை வரியை கிழக்கு மாகாண திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான அனுமதி, இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கை நடத்துதல், அலுவலகப் பயன்பாட்டிற்கான போட்டோ பிரதி இயந்திரத்திற்குப் புதிய டோனர் கொள்வனவு செய்தல் போன்ற பிரேரணைகள் அனுமதிக்கப்பட்டன.
மேலும், சபையின் JCB இயந்திரத்தை முழுமையாக திருத்தம் செய்வதற்கான பிரேரணை தொடர்பாக உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். திருத்தப்பணிகளுக்கான செலவின மதிப்பீடு மற்றும் தொழில்நுட்ப அறிக்கை தொடர்பாக மேலதிக விளக்கங்கள் தேவைப்படுவதாக சில உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டதையடுத்து, அந்தப் பிரேரணை பின்னர் விவாதிக்க ஒத்திவைக்கப்பட்டது.
எனினும், கூட்டத்தின் மிகவும் பரபரப்பான கட்டமாக அமைந்தது நீண்டகாலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பள்ளிவாசல் காணி வழக்கு தொடர்பான பிரேரணை ஆகும். குறித்த வழக்கை முன்னெடுத்து வரும் சபையின் சட்டத்தரணிக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூபா 5,000 கொடுப்பனவை ரூபா 10,000 ஆக அதிகரிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டபோது, முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.
வழக்கின் தன்மை, அதன் பின்னணி மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உணர்வுபூர்வ தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் சட்டச் செலவினத்தை அதிகரிக்க முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர்கள் வாதிட்டனர். இதனால் சபையில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டதுடன், பல சந்தர்ப்பங்களில் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் கருத்து மோதல்களில் ஈடுபட்டனர்.
சபை நடவடிக்கைகள் கட்டுப்பாட்டை இழக்கும் நிலை உருவானதைத் தொடர்ந்து தவிசாளர் எஸ். பாஸ்கரன் கூட்டத்தை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் சபை கூடியபோது, குறித்த பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு தவிசாளர் உத்தரவிட்டார்.
ஆனால், வாக்கெடுப்பில் பங்கேற்பதை மறுத்த முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து மீதமிருந்த உறுப்பினர்களுடன் குழுநிலை விவாதம் நடத்தப்பட்டு, பிரேரணையில் உள்ள சர்ச்சைக்குரிய அம்சங்கள் மீளாய்வு செய்யப்பட்டன. இதன்போது வெளிநடப்பு செய்த உறுப்பினர்களும் மீண்டும் இணைந்து கொண்டனர்.
இறுதியில், நிலைமையின் உணர்வுபூர்வ தன்மையையும் உறுப்பினர்கள் முன்வைத்த எதிர்ப்புகளையும் கருத்தில் கொண்டு, வழக்கறிஞரின் கொடுப்பனவை ரூபா 10,000 ஆக உயர்த்தும் பிரேரணையை தவிசாளர் வாபஸ் பெற்றார். இதனால் சபையில் ஏற்பட்டிருந்த பதற்றம் ஓரளவு தணிந்தது.
இதற்கிடையில், காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான காணி தொடர்பான மற்றொரு முக்கிய பிரேரணையும் சபையில் ஆராயப்பட்டது. கடந்த சுமார் ஐம்பது ஆண்டுகளாக திண்மக்கழிவு இடமாற்று நிலையமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் குறித்த காணியில் தகனசாலை அமைப்பதற்கும், புதிய சட்டபூர்வ குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் மேலும் 30 ஆண்டுகளுக்கு காணியைப் பயன்படுத்துவதற்குமான அனுமதியை சபை வழங்கியது.
மொத்தத்தில், காரைதீவு பிரதேச சபையின் 12வது மாதாந்த கூட்டம் நிர்வாக மற்றும் அபிவிருத்தி தொடர்பான பல முக்கிய தீர்மானங்களை எடுத்ததோடு, பிரதேச அரசியலிலும் சமூக உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில உணர்வுபூர்வ விவகாரங்களையும் வெளிக்கொணர்ந்தது. குறிப்பாக பள்ளிவாசல் காணி வழக்கு தொடர்பான விவாதம் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வெளிநடப்பு, எதிர்கால சபை அமர்வுகளிலும் தொடர்ந்து கவனம் பெறக்கூடிய விடயமாக மாறியுள்ளது.



