News

மக்களுக்குத் தேவையானது கைதுகள் குறித்து ஜனாதிபதி கருத்து தெரிவிப்பதல்ல, வாழ்க்கைச் செலவுக்கான பதில்களே ஆகும்…

நாடாளுமன்றத்திற்குள் நபர்களைக் கைது செய்தல் மற்றும் விசாரணைகள் குறித்து கலந்துரையாடி நேரத்தை வீணடிக்காமல், வேகமாக அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினால் மக்கள் எதிர்கொள்ளும் சுமைக்கு தீர்வுகளைக் கண்டறிவதில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடெங்கிலும் உள்ள குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மக்கள் ஜனாதிபதியிடமிருந்து தீர்வுகளையே எதிர்பார்க்கிறார்களேயன்றி, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் வெளியிடும் அறிக்கைகள் மீது மக்களுக்கு எந்தவொரு ஆர்வமும் இல்லை என நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டுகிறார்.

கைதுகள், விசாரணைகள் அல்லது நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து முன்கூட்டியே கணிப்புகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதி நாடாளுமன்ற மேடையைப் பயன்படுத்தக் கூடாது என வாதிடும் நாடாளுமன்ற உறுப்பினர், விசாரணை செய்யப்பட வேண்டிய புகார்கள் ஏதேனும் இருப்பின், அதற்குரிய சட்ட நடைமுறைகளை சுயாதீனமாக முன்னோக்கி நகர்த்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“ஏதேனும் வழக்குகள் அல்லது விசாரணைகள் இருந்தால், சட்டத்திற்கு மதிப்பளித்து அதனை நடக்க விடுங்கள். நாம் எந்தவொரு விசாரணைக்கும் சட்ட நடைமுறைக்கும் முகங்கொடுக்கத் தயாராகவே உள்ளோம். ஏனெனில், எமக்கு நீதித்துறை அமைப்பின் மீது நம்பிக்கை உள்ளது, நாம் எதிலிருந்தும் தப்பியோட மாட்டோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

பொருட்களின் விலைகள் மற்றும் வீட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளமையினால் இலங்கையிலுள்ள பெரும்பான்மையான குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டிய ராஜபக்ஷ, தற்போதைய அரசாங்கம் வாக்குறுதியளித்த நல்லாட்சிக் கொள்கைகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் சில அமைச்சர்களின் ஊழல்கள் மற்றும் நடத்தைகள் தொடர்பில் தற்போது கடுமையான கேள்விகள் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் சொத்துக்களை ஈட்டி வருவதாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும், அரசாங்க உறுப்பினர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குற்றம் சாட்டினார்.

கைதுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் குறித்து கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்து, ஜனாதிபதி அவர்கள் வாழ்க்கைச் செலவு நெருக்கடி, சாதாரண குடிமக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் மற்றும் அரசாங்கத்திற்குள் நிலவும் ஊழல்கள் குறித்து மக்கள் கொண்டுள்ள கவலைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என நாமல் ராஜபக்ஷ மேலும் வலியுறுத்தினார்.

“நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவிற்கும் தாங்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சுமைக்கும் மக்களுக்குத் தேவையானது தீர்வுகளாகும். நாட்டிற்கு இந்த நேரத்தில் தீர்க்கப்பட வேண்டிய மிக முக்கியமான நெருக்கடி அதுவேயாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Back to top button