News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மாட்டியா

பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ வின் துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” எனப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.



அவர் மலேசியாவில் தங்கியிருந்த போது அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதன் பின்னர், நேற்றிரவு (25) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



42 வயதான குறித்த சந்தேகநபர் கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், இவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தலும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.



கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து, ‘பஸ்பொட்டா’ எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரையும் அவருடன் இருந்த மற்றொருவரையும் சுட்டுக் கொலை செய்தமை மற்றும் அங்கு நின்றிருந்த மேலும் பலரைச் சுட்டுக் காயப்படுத்தியமை ஆகியவை இவர் மீதான பிரதான குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button