News

ஹரக்­கட்டா 5000 இலட்சம் ரூபா இலஞ்ச பேரத்தில், 1200 இலட்சம் ரூபாவை பெற்­­றுக்­கொண்­டதற்காக கைதான ரகித ராஜ­பக்‌ஷ, சரித் அபேசிங்க ஆகியோர் சிக்கிய வலைப்பின்னல் அம்பலம்! ; வழக்கின் பின்னணி என்ன? விளக்கம் இதுதான்

எம்.எப்.எம். பஸீர்

பாதாள உலக சந்­தே­க ­ந­ப­ரான ஹரக்­கட்டா எனும் நதுன் சிந்­தக கொலை செய்­யப்­ப­டு­வதில் இருந்து பாது­காக்க 5000 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரி, அதில் முற்­ப­ண­மாக 1200 இலட்சம் ரூபாவை பெற்­­றுக்­கொண்­டமை தொடர்பில் ஐக்­­கிய மக்கள் சக்­தியின் ஹொரணை தொகுதி அமைப்­பா­ள­ரான சரித் அபே­சிங்க, முன்­­னாள் நீதி­ அ­மைச்சர் விஜ­ய­தா­சவின் மகன் சட்­டத்­தரணி ரகித ராஜ­பக்‌ஷ, விமான நிலைய மற்றும் விமான சேவை­கள் நிறு­வ­னத்தின் முன்னாள் பணிப்­­பாளர் அருண ஸ்ரீ சத்­து­ரங்க ஆகி­யோர் வியா­ழக்­கி­ழமை (25) கைது செய்­யப்­­பட்­டனர்.

இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு நடத்திய விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் இவர்கள் நேற்று காலை சிறப்புக் குழு­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த சம்­ப­வங்­களை மையப்­ப­டுத்­தியே இந்தக் கைது நட­வ­டிக்கை இடம்­பெற்­றுள்­ளது.

இந்­நி­லையில் கைது செய்­யப்­பட்ட சந்­­தேக நபர்கள் மூவரும் நேற்று மாலை கொழும்பு பிர­தான நீதிவான் அசங்க எஸ். போத­ர­கம முன்­னி­லையில் ஆஜர்­படுத்தப்பட்டனர்.

இதன்­போது அவர்­களை எதிர்­வரும் ஜூலை மாதம் 3ஆம் திக­தி­ வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதவான் உத்­த­ர­விட்டார்.

நேற்று இலஞ்ச ஊழல் விசா­ர­ணைகள் ஆணைக்­குழு­வினர் சந்­தே­க­ ந­பர்­களை நீதி­மன்றத்தில் ஆஜர்­செய்தபோது, ஆணைக்­குழு சார்பில் உதவிப் பணிப்­பாளர் இஷானி ராஜ­ப­க்‌ஷ­வுடன் பிரதி பணிப்­பாளர் அனுஷா சம்­பந்­த­பெ­ரும ஆஜ­ராகி விட­யங்­களை முன்­வைத்­தனர்.

முதல் சந்­தே­க­ ந­ப­ரான சரித் அபே­சிங்க சார்பில் முன்­னி­லை­யான கமல், இரண்டாம் சந்­தே­க­ ந­ப­ரான ரகித ராஜ­பக்‌ஷ சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­க­ளான நெவில் அபே­ரத்ன, நளிந்த இந்­தி­ர­திஸ்ஸ ஆகி­யோ­ரோடு ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்வா ஆஜ­ரானார். மூன்றாம் சந்­தேக நப­ருக்­காக சட்­டத்­த­ரணி கீத் கரு­ணா­ரத்ன முன்­னி­லை­யானார்.

இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் பிரதி பணிப்­பாளர் சட்­டத்­த­ரணி அனுஷா சம்­பந்­த­பெ­ரும, விசா­ரணை தொடர்­பான விட­யங்­களை நீதி­மன்­றத்துக்கு பின்­வ­ரு­மாறு முன்­வைத்தார்:

“கனம் நீதிவான் அவர்­களே…. இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழு­வுக்கு கிடைக்­கப்­பெற்ற அனா­ம­தேய முறைப்­பாடு ஒன்றை மையப்­ப­டுத்தி இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. அதன்­ப­டியே இந்த மூன்று சந்­தே­க­ ந­பர்­களும் கைது செய்­யப்­பட்­டனர்.

சி.ஐ.டி தடுப்­புக்­கா­வலில் இருந்த ஹரக்­கட்டா எனும் பெயரால் அறி­யப்­படும் நதுன் சிந்­தக கொலை செய்­யப்­ப­டு­வதில் இருந்து பாது­காக்­கவும், சி.ஐ.டி தடுப்­புக்­கா­வலில் இருந்து அவரை மாற்றி பூஸா சிறைச்­சா­லையை தவிர்த்து வேறொரு சிறைச்­சா­லைக்கு மாற்­றவும் சந்­தே­க ­ந­பர்கள் இலஞ்சம் பெற்­றுள்­ளனர்.

ஹரக்­கட்­டாவின் மனைவி மது எனும் மது­ஷா­னி­யிடம் 5000 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரப்­பட்­டுள்­ளது. பின்னர் அது 2000 இலட்சம் ரூபா வரை பேரம் பேசப்­பட்டு குறைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த இலஞ்ச விவ­கா­ரத்தில் சாட்­சி­யா­ளர்­க­ளாக நதுன் சிந்­தக, மிதி­கம ருவன், ஹேர்பி எனும் நிர்­மல கமகே உள்­ளிட்­டோரின் வாக்­கு­மூ­லங்கள் பெறப்­பட்­டுள்­ளன. ஹேர்பி எனும் நிர்­மல கமகே சத்­தி­யக்­க­ட­தாசி ஒன்­றி­னையும் அளித்­துள்ளார். மிதி­கம ருவன் சத்­தி­யக்­க­ட­தாசி அளிக்க ஒப்­புதல் அளித்­துள்ளார்.”

நதுன் சிந்­தக்­கவின் சகா­வான ஹேர்பி எனும் நிர்­மல கம­கேவை தொடர்புகொண்­டுள்ள முதல் சந்­தேக நப­ரான சரித் அபே­சிங்­கவே இந்த இலஞ்ச விவ­காரம் தொடர்­பி­லான பேரம் பேசலை முன்­னெ­டுத்­துள்ளார். பின்னர் ஹேர்பி அந்த விட­யத்தை டுபாயில் வசிக்கும் ஹரக்­கட்­டாவின் மனை­விக்கு குறிப்­பிட்­டுள்ளார். ஹேர்­பிக்கும் டுபாயில் வீடு உள்ள நிலையில் அவர் அங்கு தொழில் செய்து வந்­துள்ளார்.

இந்­நி­லையில் தடுப்­புக்­கா­வலில் இருந்த ஹரக்­கட்­டாவை காப்­பாற்ற ஹேர்பி, ஹரக்­கட்­டாவின் மனை­வி­யோடு கலந்­து­ரை­யாடி முதல் சந்­தே­க­ந­ப­ருக்கு தொலை­பேசி ஊடாக அறி­வித்­துள்ளார். அதன்­ பின்னர் முதல் மூன்று சந்­தேக நபர்­களும் 2023ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி ஒரே விமா­னத்தில் டுபாய்க்கு சென்­றுள்­ளனர். இது தொடர்பில் குடி­வ­ரவு மற்றும் குடி­ய­கல்வு சான்­றுகள் அனைத்தும் பெறப்­பட்­டுள்­ளன.

இந்த இலஞ்சத் தொகை­யா­னது டுபாயில் உள்ள ஹேர்­பியின் வீட்டில் கைமாற்­றப்­பட்­டுள்­ளது. குறித்த வீட்டில் சரித் அபே­சிங்க, ரகித ராஜ­பக்ஷ மற்றும் அருண ஆகிய மூன்று பேரும் கலந்துகொண்­டுள்ள நிலையில், மற்­றைய தரப்பில் ருவன் சாமர எனப்­படும் மிதி­கம ருவன், ஹரக்­கட்­டாவின் மது எனும் மது­ஷானி மற்றும் அவ­ரது பிள்ளை, ஹேர்பி ஆகி­யோரும் இருந்­துள்­ளனர். இதன்­போதே ஹரக்­கட்­டாவின் உயி­ருக்கு 5000 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரப்­பட்­டுள்­ளது. அவ்­வ­ளவு பணம் செலுத்த தன்­னிடம் இய­லுமை இல்லை என மது­ஷானி தெரி­வித்­துள்ள நிலையில், முதலில் இலஞ்சத் தொகை 3000 இலட்சம் ரூபா வரை குறைக்­கப்­பட்­டுள்­ளது. பின்னர் அது 2000 இலட்சம் ரூபா­வாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. அதில் 1200 இலட்சம் ரூபா முற்­ப­ண­மாக சந்­தே­க ­ந­பர்­களால் கோரப்­பட்­டுள்­ளது.

குறித்த சந்­திப்பு இடம்­பெற்ற தினத்­துக்கு மறு­தினம் மது­ஷானி, ஹேர்­பியின் வீட்டில் வைத்து 1000 இலட்சம் ரூபாவை கொடுத்­துள்ளார். இதன்­போது மிதி­கம ருவனும் உடன் இருந்­துள்ளார். ஹேர்­பியும் இதனை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார். பின்னர் சந்­தேக நபர்கள் முற்­ப­ணத்தின் மிகுதி தொகை­யான 200 இலட்­சத்­தையும் கோரி­யுள்­ளனர். அந்த பணத்­தொகை பின்னர் டுபாயில் உள்ள ரகித ராஜ­ப­க்ஷவின் உற­வினர் ஒரு­வ­ரிடம் மிதி­கம ருவன், ஹேர்­பியின் ஊடாக கைய­ளித்­துள்ளார். இந்த பணம் அனைத்தும் திராம் பண அல­கி­லேயே கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

எனினும் இந்த பணத்­தொகை கைய­ளிக்­கப்­பட்ட போதும் ஹரக்­கட்டா, சி.ஐ.டி.யில் இருந்து மாற்­றப்­ப­டாமல் தடுப்­புக்­காவல் நீடிக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் ஹரக்­கட்­டாவின் மனைவி, ஹேர்­பி­யிடம் கைய­ளிக்­கப்­பட்ட பணத்­தொ­கையை மீளக்­கோ­ரி­யுள்ளார். இது தொடர்பில் ஹேர்பி, சந்­தேக நபர்­களை தொடர்­புக்­கொண்ட போது, முழு­மை­யான திட்­டப்­படி 2000 இலட்சம் ரூபா கைய­ளிக்­கப்­பட வேண்டும் எனவும், அதில் 1200 இலட்சம் ரூபாவே கைய­ளிக்­கப்­பட்ட நிலையில் அந்த தொகைக்கு ஏற்­ற­வாறு ஹரக்­கட்டா உயிர் சேத­மின்றி காப்­பாற்­றப்­பட்­ட­தாக அவர்கள் தெரி­வித்­துள்­ளனர். எனினும் சி.ஐ.டியில் இருந்து மாற்­றப்­பட வேண்­டு­மாயின் மிகுதித் தொகையும் செலுத்­தப்­பட வேண்டும் எனவும் தெரி­வித்­துள்­ளனர்.

இது தொடர்பில் தொடர்ச்­சி­யாக கேள்­வி­யெ­ழுப்­பப்­பட்ட நிலையில், முதல் சந்­தேக நப­ரான சரித் அபே­சிங்க 1000 இலட்சம் ரூபாவை திரும்ப தர முடி­யாது என குறிப்­பிட்­டுள்­ள­துடன், அந்த பணம் இரண்டாம் சந்­தேக நப­ரிடம் இருப்­ப­தாக குறிப்­பிட்­டுள்ளார். எனினும் 200 இலட்சம் ரூபாவை மீள­ளிக்க ஒப்­புக்­கொண்­டுள்ளார். அந்த 200 இலட்சம் ரூபா மிதி­கம லசந்த எனும் லசந்த விக்­கி­ர­ம­சே­கர (அண்­மையில் வெலி­கம பிர­தேச சபைக்குள் வைத்து சுட்­டுக்­கொல்­லப்­பட்­டவர்) ஊடாக ஹரக்­கட்­டாவின் மனை­விக்கு கைய­ளிக்­கம்­பட்­டுள்­ளது.

இந்த விட­யங்கள் தொடர்­பாக மது எனும் மது­ஷானி இலங்­கைக்கு வந்து வாக்­கு­மூ­ல­ம­ளிக்க விருப்பம் தெரி­விக்­காத போதும், இந்­தோ­னே­சி­யாவில் தற்­போது இருக்கும் அவர் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு அளித்­துள்ளார். அவர் பொலிஸ்மா அதி­ப­ருக்கும் இந்த முறைப்­பாட்டை செய்­துள்ளார். விசா­ர­ணை­யா­ளர்கள் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் இந்த மூன்று சந்­தேக நபர்­களும் 2023.03.25 ஆம் திக­தி­யன்று டுபாய்க்கு சென்று 2023.03.29 ஆம் திக­தி­யன்று நாடு திரும்­பி­யுள்­ளனர்.

உண்­மையில் இந்த சம்­பவம் தொடர்பில் முதலில் ‘சைபர் நியூஸ்’ எனும் இணை­யத்­தளம் ஊடாக அனுஜ ரஞ்சித் ராஜ­பக்ஷ என்­பவர் விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். அவரை ஆபாச இறு­வெட்­டுக்கள், ஆபாச பிர­சு­ரங்­களை வைத்­தி­ருந்­த­தாகக் கூறி கைது செய்து வழக்குத் தொடுத்­துள்­ளனர். அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் இரண்டாம் சந்­தேக நப­ரு­டைய தந்தை ஆவார். அவர் சட்­டமா அதிபர் ஊடாக பொலிஸ்மா அதி­ப­ருக்கு தக­வ­ல­ளித்து இந்த போலி­யான கைது நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்­ளனர். இந்த கைது நட­வ­டிக்கை 2023 செப்­டெம்­பரில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. எனவே, சந்­தேக நபர்­க­ளுக்கு பிணை­ய­ளிக்க ஆட்­சே­பனை முன்­வைக்­கிறேன் எனத் தெரி­வித்த பிரதிப் பணிப்­பாளர், ஊழல் எதிர்ப்புச் சட்­டத்தின் 149 ஆவது அத்­தி­யா­யத்­துக்­க­மைய பணிப்­பாளர் நாய­கத்தின் சான்­றி­தழை நீதி­மன்றில் முன்­வைத்தார்.

இத­னை­ய­டுத்து இரண்டாம் சந்­தேக நபர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்வா பிணை கோரினார். இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு முன்­வைத்த சான்­றிதழ் சட்­டத்தின் முன் வலு­வற்­றது என வாதிட்ட அவர், அந்த சான்­றி­தழை ஏற்­றுக்­கொண்டால் கூட விசேட கார­ணி­களின் அடிப்­ப­டையில் பிணை வழங்­கலாம் என சுட்­டிக்­காட்­டினார். இதன்­படி தனது சேவை பெறு­ந­ருக்கு ‘சிலீப் அப்­னியா’ (Sleep Apnea) எனும் நோய் நிலைமை காணப்­ப­டு­வ­தா­கவும், அதனை விசேட கார­ணி­யாக ஏற்­கு­மாறும் அவர் குறிப்­பிட்டார். அத்­துடன் தனது சேவை பெறுநர் ஒரு சட்­டத்­த­ரணி என்ற நிலையில், அவர் ஏற்­க­னவே பொறுப்­பேற்ற பல வழக்­குகள் நிலு­வையில் இருப்­பதால், அந்த வழக்­கு­களில் அவர் ஆஜ­ராக வேண்டும் என்­பதைக் கருத்­திற்­கொண்டு பிணை­ய­ளிக்­கு­மாறும் கோரினார்.

முதலாம் சந்­தே­க­ நபர் சார்பில் பிணை கோரிய சட்­டத்­த­ரணி, முதலாம் சந்­தேக நப­ருக்கு இரு­தய கோளாறு இருப்­ப­தா­கவும், அது தொடர்பில் மூன்று ‘ஸ்டென்ட்கள்’ (Stents) செலுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், மேலும் ஐந்து ஸ்டென்ட்கள் செலுத்­தப்­பட வேண்டும் எனவும் குறிப்­பிட்டு, அதனை விசேட கார­ணி­யாக ஏற்­கு­மாறு குறிப்­பிட்டார்.

மூன்றாம் சந்­தேக நபர் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி, தனது சேவை­பெ­று­ந­ருக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வினர் எந்தக் குற்­றச்­சாட்­டையும் நேர­டி­யாக முன்­வைக்­க­வில்லை எனவும், முதலாம் மற்றும் இரண்டாம் சந்­தேக நபர்­க­ளுக்கு மாத்­தி­ரமே குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், தனது சேவை­பெ­றுநர் புரிந்த குற்­றத்தை தெளி­வாக முன்­வைக்­காத நிலையில் அதனை விசேட கார­ணி­யாகக் கருதி பிணை­ய­ளிக்­கு­மாறு கோரினார்.

இத­னை­ய­டுத்து இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு சார்பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி அனுஷா சம்­பந்­த­பெ­ரும, மீண்டும் விட­யங்­களை முன்­வைத்தார்:

“ஊழல் எதிர்ப்புச் சட்­டத்தின் 149ஆவது அத்­தி­யா­யத்தின் பிர­காரம் முன்­வைக்­கப்­பட்ட சான்­றிதழ் சட்­ட­ரீ­தி­யா­னது. எனவே சந்­தே­க ­ந­பர்­க­ளுக்கு பிணை­ய­ளிக்க வேண்­டு­மாயின் விசேட கார­ணிகள் ஆரா­யப்­பட வேண்டும். முதல் சந்­தே­க ­நபர் மற்றும் இரண்டாம் சந்­தேக நபரின் நோய் நிலைமையை விசேட காரணியாக கருத முடியாது. இரண்டாம் சந்தேக நபரின் தந்தை முன்னாள் நீதி அமைச்சரும், இந்த சம்பவத்தோடு தொடர்புப்பட்டு டுபாய் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு எதிராகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் சந்தேக நபரே இந்த இலஞ்சப் பணத்தை உண்டியல் முறைமை ஊடாக நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். இதுவே அவர் மீதான குற்றச்சாட்டு. எனவே சந்தேக நபர்களுக்கு பிணையளிக்க வேண்டாம்.”

அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதிவான் அசங்க எஸ். போதரகம, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149ஆவது அத்தியாயத்தின் பிரகாரமான சான்றிதழ் சட்ட ரீதியானது என நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். அதன்படி சந்தேக நபர்களுக்கு பிணையளிப்பதாயின் விசேட காரணிகள் அவசியம் எனவும், எனினும் நீதிமன்றின் முன் அவ்வாறான போதிய விடயங்கள் முன்வைக்கப்படாததால் சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button