மின்விநியோகக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கும், மக்களுக்கு மிகவும் நம்பகமான மின்சார விநியோகத்தை வழங்குவதற்கும் அரசு எடுத்துள்ள முயற்சியின் மற்றுமொரு நடவடிக்கையாக 280 MWh ஆற்றல் மின் சேமிப்பு திறனை கொண்ட ஏழு பேட்டரி அமைப்புகள் (BESS) நாட்டை வந்தடைந்தன .

மின்விநியோகக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கும், நுகர்வோருக்கு மிகவும் நம்பகமான மின்சார விநியோகத்தை வழங்குவதற்குமான தேசிய திட்டத்தின் கீழ், மேலும் ஏழு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன அறிவித்துள்ளார்.
புதிய அமைப்புகள் பாணந்துறை, பெலியத்த, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, வவுனதீவு, வாழைச்சேனை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில் உள்ள மின்வழங்கல் உப-நிலையங்களுக்கு அருகில் நிறுவப்படவுள்ளன.
இவை ஒன்றிணைந்து 280 MWh ஆற்றல் சேமிப்பு திறனை அதிகரிப்பதுடன், தேசிய மின்விநியோகக் கட்டமைப்புக்கு 70 MW மின்சாரத்தை வழங்குவதற்கும் வழிவகுக்கும்.
இதற்கு முன்னர் ஜூன் மாத தொடக்கத்தில், எட்டு BESS அலகுகள் இறக்குமதி செய்யப்பட்டு தற்போது நிறுவப்பட்டு வருகின்றன.
ஜூலை மாத இறுதிக்குள், அவை மின்விநியோகக் கட்டமைப்புக்கு 80 MW பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைத்தல், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் ஸ்திரமான மற்றும் நம்பகமான மின்சார விநியோகத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் இத்திட்டம் மற்றொரு முக்கியமான படியாகும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



