டெங்கு தொற்று ஆனது தோல்வியுற்ற ஆட்சியா, அல்லது அரசுக்கு எதிரான சதியா ?

டெங்கு தொற்று ஆனது தோல்வியுற்ற ஆட்சியா, அல்லது அரசுக்கு எதிரான சதியா ?
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சுயாதீன விசாரணை கோருகிறது
நாடு முழுவதும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை இலங்கை வரலாற்றில் இதுவரை பதிவாகாத அதிகபட்ச அளவை எட்டியுள்ள நிலையில், அதற்கு காரணமான உண்மையான காரணங்கள் தொடர்பில் உடனடி தீவிர விசாரணை அவசியம் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், நகர சபை உறுப்பினருமான கலீலுர் ரஹ்மான் அவர்கள் தெரிவித்தார்.
“டெங்கு கொசு பெருகுவதற்கான முக்கிய காரணமான சுற்றுச்சூழல் அசுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான முதன்மைப் பொறுப்பு நேரடியாக உள்ளூராட்சி நிறுவனங்களுக்கே உரியது. ஆனால், சமீபத்தில் நடந்த உள்ளூராட்சி தேர்தலில் அந்த நிறுவனங்களில் அதிகாரத்தை முழுமையாக பெற்றது தற்போதைய அரசாங்கமான தேசிய மக்கள் சக்தி ஆகும். அவ்வாறு இருந்தும் டெங்கு கட்டுப்பாடு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது, மேலும் அரசாங்கத்தின் உத்தரவுகள் உள்ளூராட்சி மட்டத்தில் செயல்படுத்தப்படாமல் இருப்பது, இது சாதாரண திறமையின்மையா அல்லது அரசாங்கத்தின் மதிப்பை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் உள் சதியா என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக ஏற்பட்டுள்ளது,” என்று கலீலுர் ரஹ்மான் அவர்கள் மேலும் கூறினார்.
“Clean Sri Lanka” ஜனாதிபதி செயலணி, சுற்றாடல் பொலிஸ் பிரிவு, சுற்றாடல் அமைச்சு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள், மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி குழுக்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபை, கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை, தேசிய கழிவு முகாமைத்துவ ஆதரவு மையம், தேசிய நீர்வள நீர்தேக்க பாதுகாப்பு சபை ஆகிய பில்லியன் கணக்கான செலவில் இயங்கும் அரச இயந்திரங்கள் பல இருந்தும், ஒருங்கிணைந்து டெங்குவை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது, வரி பணத்தில் பேணப்படும் இந்த நிறுவனங்களின் கட்டமைப்பு ரீதியான தோல்வியை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
டெங்கு காரணமாக பிள்ளைகள், பெற்றோர்கள், உறவினர்களை இழக்கும் வலி மக்களால் தாங்க முடியாதது. அரசாங்கம் எவ்வளவு ஊழல்வாதிகளை பிடித்து எவ்வளவு வேலைகளை காட்டினாலும், மக்களின் இறுதி தீர்பு தங்கள் அன்பானவர்களின் உயிரை காப்பாற்ற அரசாங்கத்தால் முடிந்ததா என்பதிலேயே உள்ளது. இந்த தோல்வி அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியை ஏற்படுத்தி, எதிர்கால அரசியல் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்துவதுடன், மூன்றாம் தரப்பினருக்கு அரசியல் ஆதாயம் பெற வழிவகுக்கும்.
எனவே, நாட்டின் சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பை நேரடியாக பாதிக்கும் இந்த நெருக்கடி தொடர்பில், டெங்கு அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாததற்கான உண்மையான காரணங்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள தரப்பினர் குறித்து உடனடியாக சுயாதீனமான மற்றும் வலிமையான குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் கோருவதுடன், “Clean Sri Lanka” என்பது ஒரு பெயர் பலகை அல்ல, மக்களின் உயிரை காப்பாற்றும் நடைமுறை திட்டமாக இருக்க வேண்டும் எனவும் பொதுச் செயலாளர் வலியுறுத்தினார். இது மக்களின் உயிர் மற்றும் நாட்டின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினையாகும்.



