நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட போகிறது… உடனடியாக செயற்படுமாறு கோரி நாமல் ராஜபக்ஷ, சஜித் பிரேமதாசவிற்கு விசேட கடிதம் அனுப்பினார்
ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் கலந்துரையாடல் ஒன்றிற்காக அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு கோரி, இலங்கை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இன்று (07) தினத்திட்டமிடப்பட்ட இந்தக் கடிதத்தின் ஊடாக, ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது நியாயமான காரணங்கள் ஏதுமின்றி உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் இந்நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுவதுடன், இலங்கையின் ஜனநாயகச் செயற்பாட்டிற்கும் அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் லோ ஆசியா (LAWASIA) போன்ற சர்வதேச மற்றும் உள்ளூர் சட்ட நிறுவனங்கள் ஏற்கனவே தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன என்பதை பாராளுமன்ற உறுப்பினர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சட்டத்தின் ஆட்சிக்கு ஆதரவாகச் செயற்படும் அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து இந்த வேலைத்திட்டத்திற்கு எதிராகச் செயற்பட வேண்டும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் சஜித் பிரேமதாச உடனடியாகத் தலையிட்டு, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் ஏனைய பிரதான கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் விரிவான கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ மேலும் கோரியுள்ளார்.



