News

எல் நினோ – லா நினா நிலைமையால் கடுமையான குழப்பநிலை உருவாகி உள்ளது ; சஜித்

காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள், சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்களைத் தலைநகரத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி, கிராமிய மட்டத்தில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



காலநிலை மாற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எல் நினோ – லா நினா (El Nino – La Nina) காலநிலை குறித்து சர்வதேச நிபுணர் குழுவினருடனான விசேட அமர்வு இன்று (18) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.



இதில் பங்கேற்று உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.



காலநிலை மாற்றம் பற்றிய கலந்துரையாடல்களைத் தலைநகரத்தை மையமாகக் கொண்ட பாராளுமன்ற விவாதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, கிராமப்புற மற்றும் ஏனைய நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். கிராமங்கள்தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அடிமட்ட அளவிலான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



இந்தக் கலந்துரையாடல்களையும் விழிப்புணர்வுச் செயற்பாடுகளையும் தலைநகரத்திற்கு வெளியே கிராமங்களுக்குக் கொண்டுசெல்வதன் மூலம், சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான கொள்கை வகுப்பில் சாதாரண பொதுமக்களும் பங்கெடுக்கும் வாய்ப்புக் கிடைக்கும். இது பங்கேற்பு ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.



மேலும், எல் நினோ – லா நினா நிலைமையால் கடுமையான குழப்பநிலை உருவாகிக் காணப்படுகின்றது. இதனால் நமது நாடு, சுற்றாடல் கட்டமைப்பு, பல்லுயிர்ப் பெருக்கம், தாவரங்கள் மட்டுமன்றி விலங்கினங்கள் மற்றும் மனித வளங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது குறித்த பல விடயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.



அத்துடன், யானை – மனித மோதலைக் குறைத்தல் மற்றும் சிறுத்தைகளைப் பாதுகாத்தல் குறித்து நிபுணத்துவக் கலந்துரையாடல்கள் மற்றும் அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டதையிட்டுத் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.



இந்த அமர்வில் காலநிலை மாற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவரான பேராசிரியர் எல்.எம். அபேவிக்ரம மற்றும் இத்துறை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த பேராசிரியரான அஹிம்சா காம்போஸ்-அர்சிஸ் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button