News

மாலிமா அமைப்பாளரைக் கைதுசெய்யக் கோரி போராட்டம்..

கொட்டகலை பிரதேச சபையின் ஈரோஸ் ஜனநாயகக் கட்சியின் சுயேச்சை உறுப்பினர் கணேசன் ராஜேந்திரனைத் தாக்கிய தேசிய மக்கள் சக்தியின் ) கொட்டகலை பிரதேச அமைப்பாளரையும் அவரது ஆதரவாளரையும் உடனடியாகக் கைதுசெய்யக் கோரி, ஈரோஸ் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் ராஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் ஆதரவாளர்கள் பலர் (23 ஆம் திகதி) கொட்டகலை நகரிலுள்ள பண்பாட்டழுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் ராஜேந்திரன், தாக்குதலுக்கு இலக்கான பிரதேச சபை உறுப்பினர் தொடர்ந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்தார்.

கொட்டகலை பிரதேச சபையின் உப தவிசாளர் ஜேசுதாசன் யாகுல மேரி (தேசிய மக்கள் சக்தி) சபை அமர்வுகளில் உரையாற்றாமை மற்றும் அவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்து தமது உறுப்பினர் கருத்துக்களை முன்வைத்தமையினாலேயே அவர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஜீவன் ராஜேந்திரன் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, ஈரோஸ் ஜனநாயகக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினரும் தம்மைத் தாக்கியதாகக் குற்றம்சாட்டி, தேசிய மக்கள் சக்தியின் கொட்டகலை பிரதேச அமைப்பாளரும் அவரது ஆதரவாளர் ஒருவரும் திம்புள்ள-பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரு தரப்பிலிருந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதால், மூவரும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய பின்னர் அவர்களைக் கைது செய்து ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திம்புள்ள-பத்தனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

(செய்தி: ரஞ்சித் ராஜபக்ஷ)

Recent Articles

Back to top button