News

மட்டக்களப்பில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 கொ*லைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் சிபான், முகமட் சகீத் ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

கனகராஜா சரவணன்

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூவரையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை (24) உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், லண்டனில் உள்ள சந்தேகநபரான ‘பொலிஸ் பாய்ஸ்’ என்பவருக்கு எதிரான பிடிவிறாந்தையும் நீடித்து உத்தரவிட்டார்.

கடந்த 2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை, காத்தான்குடியில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை மற்றும் வர்த்தகர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஏற்கனவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) கைது செய்தனர்.

இந்த 5 முக்கிய கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிள்ளையான், காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தகவலாளிகள் மற்றும் லண்டனில் உள்ள ‘முகமது பாய்ஸ்’ (பொலிஸ் பாய்ஸ்) உட்பட நால்வருக்கு எதிராக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கடந்த 2026 ஜூன் 17ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுத் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

இன்று வெள்ளிக்கிழமை (24) குறித்த வழக்கு விசாரணைக்காக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்களான முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகிய இருவரையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் திறந்த நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். எனினும், பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி பிள்ளையானை நீதிமன்றத்திற்கு அழைத்து வர முடியாதுபோனதாகச் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், இக்கொலைச் சம்பவங்களுடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தனர்.

இதேவேளை, பிள்ளையான் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, பிள்ளையானை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கடந்த வழக்கு விசாரணையின்போது முன்வைத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதவான், பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையுடன் இணையவழி (Zoom) காணொளி மூலமாகத் தொடர்புகொண்டு நிலைமைகளைப் பார்வையிட்டார்.

வழக்கை ஆராய்ந்த நீதவான், கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும், லண்டனில் உள்ள ‘போலீஸ் பாய்ஸ்’ என்பவருக்கு எதிரான பிடிவிறாந்தை தொடர்ந்தும் நீடிக்குமாறும் உத்தரவிட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button